
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழக முதல்வர் வெளிநாடு சென்று விட்டு இன்று தமிழகத்தில் கால் வைத்துள்ளார். முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு முன்பு சென்ற போது எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தார்கள். தமிழகத்தில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு தெளிவான கணக்கு கிடையாது. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று நமது பலத்தை காண்பித்து வந்திருக்கிறார்.
காங்கிரசை சேர்ந்தவர்கள் நேற்று நெல்லையில் ஒரு மாநாட்டை நடத்தியிருக்கின்றனர். கூட்டம் போடுவதற்காகவாவது தென் மாவட்டம் நியாபகம் வந்திருக்கிறதே. ஓட்டு திருடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சொல்கிறார். ஆரம்ப காலத்தில் இருந்து கள்ள ஓட்டிற்கு மிகப் பிரமாண்டமான அங்கீகாரத்தை கொடுத்தது தி.மு.கதான். கள்ள ஓட்டை கலாசாரமாக மாற்றிய தி.மு.கவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு சிதம்பரம் பேசுகிறார்.
தி.மு.க கூட்டணியை விட்டு வெளியே வர தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்கு தைரியம் இருக்கிறதா? கம்யூனிஸ்டுகள் தங்களின் கொள்கைகளை மறந்து தி.மு.கவுடன் கூட்டணியில் இருக்கிறார்கள்
. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பட்டியலின சமூகத்தினரை காலில் விழ வைத்தாலும் கவலை கிடையாது. வேங்கை வயல் பிரச்னையை பற்றி கவலை கிடையாது. கூட்டணிக்காக கட்சியின் கொள்கையை மறக்கடித்து தி.மு.க அவர்களுடன் வைத்துள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எ.ல்ஏவிடம் இருந்து 27 கிலோ தங்கம், ரூ.2,000 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் எல்லா திருட்டையும் செய்வார்கள். நடவடிக்கை எடுத்தால் பழிவாங்குகின்றனர் என்று சொல்வார்கள். வாக்குத்திருட்டு என்று சொல்கிறார்களே மக்களின் வரிப்பணத்தை திருடியது காங்கிரஸ்தான். இன்று தமிழ்நாட்டில் ஏழு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளது. அந்தக்கூட்டணி வலுவான கூட்டணிதான். அ.தி.மு.க உட்கட்சியில் சில பிரச்னைகள் வந்தால் அதை அந்தக்கட்சியே தீர்த்துக் கொள்ளும்.” என்றார்.