
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், “அதிமுக ஒன்று சேர வேண்டும், பிரிந்தவர்கள் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்று 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து செங்ககோட்டையன் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளை நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
எடப்பாடி குறித்து பேசிய கருணாஸ், ” ஜெயலலிதாவின் கனவை படுபள்ளம் தோண்டி புதைக்கக்கூடிய வேலையை எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டிருக்கிறார்.
2026-ல் திமுகவின் ஆட்சிதான் உருவாகும். அன்று இபிஎஸ் தலைமையிலான அதிமுக எங்கே இருக்கும் எனக்கூட தெரியாது.
ஆனாலும் அந்தக் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று செங்கோட்டையன் மாதிரி நானும் நினைக்கிறேன்.
தன் மறைவிற்குப் பிறகும் எஃகு கோட்டையாக அதிமுக இருக்கும் என்று நம்பிய ஜெயலலிதாவின் உறுதிமொழியை பொய்யாக்கும் விதமாக எஃகு கோட்டையை மக்கிய கோட்டையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தாலும் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவதே கடினம். ‘கடைசியாக செங்கோட்டையன் மேலேயே கை வெச்சுட்டியான்னு’ கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டப்படும். சுயநல அரசியலை செய்துகொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று காட்டமாக விமர்சித்து பேசியிருக்கிறார்.