• September 8, 2025
  • NewsEditor
  • 0

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்

சுமார் இரண்டாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் தேர்தல் நடந்தது நினைவிருக்கலாம்.

நடிகர் பரத் தலைமையிலான அணி, சிவன் சீனிவாசன் தலைமையிலான அணி, தினேஷ் தலைமையிலான அணி என மூன்று அணிகள் போட்டியிட்ட நிலையில், பரத் தலைமையிலான அணி அனைத்து இடங்களையும் கைப்பற்றியது.

தொடர்ந்து அந்த அணியினர் துணை முதல்வர் உதயநிதி, ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவலவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், இசையமைப்பாளர் இளையராஜா என வி.ஐ.பிக்கள் பலரைச் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

பரத்

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி

இந்த நிலையில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில், நேற்று தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், நடிகர் ராதாரவி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து சுஜாதா விஜயகுமார், சின்னத்திரை நடிகர் சங்க முன்னாள் தலைவர் ராஜேந்திரன், சீரியல் இயக்குநர் சங்கத் தலைவர் மங்கை அரிராஜன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதேநேரம், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர்/நடிகைகளிடையே இந்த நிகழ்வு குறித்து பல்வேறு அதிருப்தியும் நிலவியதாகக் கூறப்படுகிறது. நிகழ்வில் கலந்து கொள்ள வந்த சிலர் பாதியில் வெளியேறியதும் நடந்தது.

இது குறித்து தங்கள் பெயரைக் குறிப்பிட விரும்பாத சிலர் நம்மிடம் கூறியது இதுதான்:

“எதிரணிக்கு ஒரு சீட் கூட விடாமல் அமோக வெற்றி பெற்றது எல்லாருக்கும் சந்தோஷம்தான். எந்தவொரு நல்ல விஷயத்தையும், எந்தவொரு முட்டுக்கட்டையும் வராதபடி நிறைவேற்ற இது உதவும்.

ராஜேந்திரன்

அதே நேரம் ஜெயித்தால் உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டு அடுத்த வேலையை கவனிக்கப் போகணும். அதை விட்டுட்டு ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர் எதுக்குப் போய் பார்க்கணும்னு தெரியவில்லை.

துணை முதல்வரை, செய்தித் துறை அமைச்சரை சந்திக்கிறதுல தவறு இல்லை. அவர்களிடம் உறுப்பினர்களுக்கான கோரிக்கை வைக்க வேண்டியிருக்கும். ஆனால் மற்ற கட்சித் தலைவர்களை எல்லாம் எதுக்குப் பார்க்கணும்? அதற்கே நேரத்தைச் செலவழிக்க முடியாது.”

அவங்களை கூப்பிட வேண்டியது ஏன்?

முடிந்தவரை சங்கத்தில் அரசியல் கலக்காம பார்த்துக்கொள்வது நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்க தேவையில்லாத அரசியல் சங்கத்தில் வர வேண்டாம்.

சின்னத்திரை சங்க தேர்தல் நடவடிக்கையில்
சின்னத்திரை சங்க தேர்தல் நடவடிக்கையில்

அடுத்து பதவி ஏற்பு விழாவைப் பொறுத்தவரை, இந்த அணியின் வெற்றிக்காகப் பாடுபட்ட நிறைய பேருக்கு தகவல் கூட சொல்லவில்லை. ஆனால் எதிரணியில் போட்டியிட்ட பலரை கூப்பிட்டு மேடைக்கு அழைத்தனர்.

எல்லாவற்றுக்கும் உச்ச கட்ட கொடுமை என்றால், நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகை அம்முவைக் கூப்பிட்டதுதான். ஏற்கெனவே ஒரு டிவியில் அவர்கள் பேசிய பேச்சால் ஊரே அவர்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள்; அவங்களை கூப்பிட வேண்டியது ஏன்?

எது வைரலாகப் போகுது?

இது வேணும்னு பண்ணின மாதிரி இருக்கு. வைரலா போற விஷயத்தை டச் பண்ணினோம்னு சொல்கிறார்கள். ஆனால் பாசிட்டிவா, நெகடிவா எது வைரலாகப் போகுதுனு தெரிய வேண்டாமா? அவர்களை விட்டா நிகழ்ச்சியை தொகுப்பவர் யாரும் இல்லையா? சின்னப் பசங்கனு காட்டிட்டாங்க. யாரோ நிர்வாகி ஒருவருடைய வற்புறுத்தலாலேயே அவர்களை கூப்பிட்டதாக சொல்கிறார்கள்.

டிவி நடிகர் சங்க பதவி ஏற்பு

பெரிய சோதப்பல்

அவர்கள் மேடையிலும் நாகரிகம் இல்லாமல் அதட்டியும் மிரட்டியும் பேசிச் சென்றிருந்தவங்களைக் கடுப்பேத்தினார்கள். இதனால்தான் சிலர் நிகழ்ச்சி முடியறதுக்குள் கிளம்பிப் போயிட்டார்கள்.

திரும்ப மைக் பிடித்த ராதாரவி, சங்கத்தைப் பற்றி பேசுவதை விட்டுட்டு நாய் விவகாரத்தைப் பேசத் தொடங்கினார்.

நிகழ்ச்சியும் பெரிய சோதப்பல். தேர்தல் நடத்தின அதிகாரியை மேடையிலேயே தலைவர் திட்டினார்; அவரை சிலர் போய் தடுத்ததும் நடந்தது.

ஏகப்பட்ட குழப்பங்கள்

சங்கத்தின் முதல் செயலாளர் ராஜேந்திரனின் பெயரை அழைப்பிதழில் முதலில் போடவில்லை. எனவே அவர் நிகழ்வுக்கு வர இயலாது எனச் சொல்லிவிட்டதால், மறுபடி அழைப்பிதழ் தயார் செய்து அனுப்பியிருக்கிறார்கள்.

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் உறுப்பினர்கள்

இப்படியாக ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாரும் சின்ன வயது இருக்கிறதால, அனுபவம் வாய்ந்த முன்னாள் நிர்வாகிகள் யார்கிட்டயாச்சும் ஆலோசனை கேட்டு செயல்பட்டாலே ஒழிய, இந்த மாதிரி அலங்கோலங்களைத் தடுக்க முடியாது என்று கூறுகிறார்கள் இவர்கள்.

இது தொடர்பாகக் கேட்க சங்கத்தின் செயலாளர் நவீந்தரிடம் பேசிய போது, “அம்முவை அழைத்தது பரபரப்புக்காக அல்ல; முதலில் நித்யா மேடத்தைக் கூப்பிட முடிவு செய்திருந்தோம். அவர்களுக்குத் தேதி இல்லை” என்று முடித்துக் கொண்டார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *