
ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முயற்சிகள் எடுத்தும், அவை எதுவும் பலன் அளிக்கவில்லை.
ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது போரை மேற்கொண்டுகொண்டே வருகிறது.
இதன் காரணமாக, ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா, ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளின் மீது கூடுதல் 25 சதவீத வரியை விதித்துள்ளது.
இதன் விளைவாக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்கா சென்று டிரம்பை சந்தித்தார்.
அப்போது தீர்மானிக்கப்பட்ட புதின் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு இதுவரை நடைபெறவில்லை.
இந்நிலையில், ரஷ்யா தொடர்ந்து உக்ரைனையும், உக்ரைன் ரஷ்யாவையும் தாக்கிக்கொண்டே வருகின்றன.
ட்ரம்ப் பதில்
இந்த நிலையில், கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் போலந்து அதிபர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, போலந்து பத்திரிகையாளர் ஒருவர், ரஷ்யா மீது அமெரிக்கா ஏன் நேரடியாக வரி விதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு டிரம்ப், “இந்தியா மீது இரண்டாம் நிலை வரி விதித்தது நடவடிக்கை அல்லவா? இதனால் ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை நடவடிக்கை அல்ல என்று சொல்கிறீர்களா?” என்று கடுமையாக பதிலளித்தார்.

தயார்!
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், “ரஷ்யா மீது இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை நேரடியாக ரஷ்யாவைச் சுட்டிக்காட்டுமா அல்லது ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகளின் மீது விதிக்குமா என்பது இன்னும் பார்க்க வேண்டிய நிலைமையாக உள்ளது.