
அதிகாலை டெல்லி பயணம்
அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காலக்கெடு விதித்திருந்தார்.
இதையடுத்து அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை செங்கோட்டையன் தனது இல்லத்திலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார்.
இதற்காக கோவை விமான நிலையம் வந்த செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஹரித்வார் ராமர் கோவிலுக்குச் செல்கிறேன். முதலில் சென்னை சென்று, அங்கிருந்து மதியம் டெல்லி விமானத்தில் பயணிக்கிறேன். பா.ஜ.க. தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை”
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும்
“மனம் சரியில்லாததால் கோயிலுக்கு செல்கிறேன். கலங்கி விட வேண்டாம் என்று தொண்டர்கள் கூறுகின்றனர். நியாயமான கோரிக்கையைத்தான் வைத்திருக்கிறேன் என்றும் தொண்டர்கள் சொல்கிறார்கள். இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் என்னை நேரில் சந்தித்து சென்றுள்ளனர்”

“என்னுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை யாரும் சொல்லவில்லை. கட்சியின் நலனுக்காகத்தான் நாங்கள் சொல்கிறோம்.
பொதுச் செயலாளர் பல்வேறு முடிவுகளை எடுத்திருக்கிறார்; அந்த முடிவுக்கு காலமே பதில் சொல்லும். கோயிலுக்கு சென்று வந்தால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும் என்பதால் செல்கிறேன்”
சஸ்பென்ஸ்
“ஹரித்வாருக்கு சென்று ராமரையே சந்திக்கிறேன். ராமாயணத்தில் வரும் ராமர், கம்பராமாயணத்தில் வரும் அந்த ராமரைத்தான் சந்திக்கப் போகிறேன். வேறு யாரையும் சந்திப்பதில்லை.
ஹரித்வாரில் ராமரைச் சந்தித்து விட்டு, நாளை பிற்பகல் விமானத்தில் திரும்புகிறேன். அனைவரும் ஒன்றிணைந்தால் தான் கட்சி நன்றாக இருக்கும் என்று நான் சொன்னேன்” எனச் செங்கோட்டையன் தெரிவித்தார்.

“தொண்டர்கள் ‘தைரியமாக இருங்கள்’ என்று ஆறுதல் கூறி செல்கின்றனர். கடந்த இரண்டு நாள்களாக வீட்டில்தான் இருக்கிறேன்.
என்னுடைய கருத்தை பலரும் வரவேற்றுள்ளனர். நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் எனது கருத்தை ஆதரித்துள்ளனர்” என்றார் செங்கோட்டையன்.
அவரிடம், ‘நிர்வாகிகள் யாராவது பேசினார்களா?’ என்று கேட்கப்பட்டபோது, “சஸ்பென்ஸ்” என சுருக்கமாகப் பதிலளித்தார்.