
ஊட்டி: மஞ்சூர் – கோவை மலைப்பாதையில் காரை வழிமறித்து காட்டு யானை ஆவேசமாக தாக்கியதில் கார் சேதமடைந்தது. குழந்தையுடன் சென்ற தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம் காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டம் உள்ளதால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீப நாட்களாக அந்த பகுதியில் 3 குட்டி யானைகள் அடங்கிய யானை கூட்டம் சுற்றித் திரிகிறது. இந்த யானை கூட்டம் கடந்த சில நாட்களாக அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழி மறிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். ஒரு சில சமயங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலையில் அரசு பேருந்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.