
கோவை: “என்னுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை யாரும் கூறவில்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். டெல்லி புறப்பட்ட அவர், “பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை” என்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து, கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தலைமையிடம் வலியுறுத்தி காலக்கெடு நிர்ணயித்துள்ளார். அதேசமயம், அவரது கோரிக்கையை ஏற்காத கட்சித் தலைமை, அவரிடம் இருந்து அமைப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை பறித்தது. மேலும், அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் கட்சி தலைமை பறித்தது.