
Doctor Vikatan: என்னுடைய தோழி, கடந்த 3 மாதங்களில் 2 கிலோ எடை குறைத்திருக்கிறாள். தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் வெந்நீர் குடிப்பதுதான் வெயிட்லாஸ் ரகசியம் என்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை, வெந்நீர் குடித்தால் வெயிட்லாஸ் சாத்தியமா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
நாள் முழுவதும் வெந்நீர் குடிப்பது மிகவும் நல்லது. அது எடைக்குறைப்புக்கு உதவுகிறதோ இல்லையோ, சீரான செரிமானத்துக்கு நிச்சயம் உதவும்.
வெந்நீர் குடிப்பது நல்லது என்றாலும் சிலர், அதில் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள் வெந்நீர் குடித்தால் அவர்களுக்கு அசிடிட்டி பாதிப்பு இன்னும் தீவிரமாகும்.
ரொம்பவும் சூடாக இல்லாத வெதுவெதுப்பான சூட்டில் உள்ள நீரை நாள் முழுவதும் குடிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆயுர்வேதமும் சொல்கிறது. ஆனால், அதுவும் எடைக்குறைப்புக்கு உதவும் என்று சொல்லவில்லை.
எடைக்குறைப்பு என்பது இப்படி ஒரே ஒரு விஷயத்தைப் பின்பற்றுவதால் சாத்தியமாவதில்லை. பலரும் அப்படித் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு, காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை கலந்த வெந்நீர் குடிப்பது, வினிகர் கலந்த நீர் குடிப்பதெல்லாம் வெயிட்லாஸுக்கு உதவும் என நினைத்துப் பின்பற்றுகிறார்கள்.
அப்படி அவர்கள் பின்பற்றும் அந்த ஒன்று மட்டுமே வெயிட் லாஸுக்கு உதவும் என்றால், உடல் பருமன் என்பது இவ்வளவு பெரிய விஷயமாக நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கத் தேவையில்லையே…

எடைக்குறைப்பு என்பது நாள் முழுவதும் நீங்கள் குடிக்கிற, சாப்பிடுகிற உணவுகளையும், செய்கிற வேலைகளையும் பொறுத்தது.
வெறும் வயிற்றில் வெந்நீரைக் குடித்துவிட்டு, அன்றைய நாள் முழுவதும் பஜ்ஜி, போண்டா, சமோசா என சாப்பிட்டால் எடை குறைந்துவிடுமா…
காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், புரதச்சத்துள்ள உணவுகள், தயிர், மோர் என எல்லாவற்றையும் பேலன்ஸ்டாக சாப்பிடும்போதுதான் எடை குறைப்பு சாத்தியமாகும்.
கூடவே, நீங்கள் சாப்பிடும் உணவுகளின் மூலம் உடலில் சேரும் கலோரிகளை எரிக்கும் அளவுக்கு உங்கள் உடல் இயக்கம், உடற்பயிற்சிகள் இருக்க வேண்டும். அப்போதுதான் எடை குறையும்.
எனவே, சமூக ஊடகங்களில் பரவும் இதுபோன்ற தவறான வாக்குறுதிகளை நம்பியும், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டும் எந்த விஷயத்தையும் பின்பற்றாதீர்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.