
தமிழ் சினிமாவின் இரு மகா நட்சத்திரங்களான கமல் ஹாசனும் ரஜினிகாந்தும் மீண்டும் இணைந்து நடிப்பார்களா? என்ற ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு SIIMA விருது விழாவில் கமல் ஹாசன் பதிலளித்துள்ளார்.
இருவரும் ஆரம்ப காலத்தில் அபூர்வ ரகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
கால ஓட்டத்தில் இருவரும் எதிரெதிர் நட்சத்திரத் துருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்குள் எந்தப் போட்டி மனப்பான்மையும் இல்லை என, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தெரிவித்து வந்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக இருவரும் அடிக்கடி ஒரே மேடையையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில்தான், இருவரும் திரையையும் பகிர்ந்து கொள்ளப்போவதாக நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
கல்கி 2898 ஏடி படத்திற்காக SIIMA விருது பெற்ற நடிகர் கமல் ஹாசனிடம், “ரஜினிகாந்துடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பீர்களா?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகர் கமல் ஹாசன்:
“இது தரமான சம்பவமா என்று தெரியாது. ஆனால், ரசிகர்களுக்கு பிடித்தால் நல்லது. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் எங்களுக்கும் பிடிக்கும். இல்லையென்றால் தொடர்ந்து முயற்சி செய்வோம்.”
இது நீண்ட காலமாக பலரும் கேட்கும் விஷயம். இருவருக்கும் ஒரே பிஸ்கட்டை கொடுத்ததால், எங்களுக்கு ஒவ்வொருவருக்கும் பாதி பாதிதான் கிடைத்தது. அதனால் நாங்கள் முழு பிஸ்கட்டுக்காகப் பிரிந்தோம்.
இப்போது அந்த அரை பிஸ்கட்டே போதும். இருவருக்கும் அதுவே மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால் இணைந்து வருகிறோம். எங்களுக்குள் போட்டி இருப்பதாக நீங்கள்தான் நினைத்தீர்கள், உருவாக்கினீர்கள்.
எங்களுக்கிடையே எந்தப் போட்டியும் இல்லை. இந்த வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். அப்போதே நாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். அப்படித்தான் அவர் இருக்கிறார், நானும் இருக்கிறேன்.

வியாபார ரீதியாகத்தான் இப்போது இணைகிறோமே தவிர, எங்களுக்கு இது எப்போதோ நடக்க வேண்டியது. இப்போதாவது நடக்கிறதே, நடக்கட்டும் என்பது போலத்தான் எங்களுக்கு இருக்கிறது.
நாங்கள் ஒருவர் படத்தை ஒருவர் தயாரிக்க எப்போதும் விரும்பியிருக்கிறோம். ஆனால், இப்போது வேண்டாம், அப்போது வேண்டாம் என்று நாங்களே எங்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம்,” என்றார்.
’கூலி’ படத்துக்குப் பிறகு ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கூறியிருந்தார்.
ஆனால், அந்தப் படத்துக்கு முன்னதாக ரஜினி–கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். இதனை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…