
சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் `நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாமை கடந்த மாதம் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து வாரம் தோறும் சனிக்கிழமைகளில் முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 5-வது வாரமாக நேற்று முன்தினம் 35 மாவட்டங்களில் 35 இடங்களில் நடந்த முகாம்களில் 54,350 பேர் பயனடைந்தனர். இதுவரை நடைபெற்ற 5 முகாம்களில் 2.61 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
இந்த முகாம்களில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், குழந்தைகள் நலம் சார்ந்த ஆலோசனைகள் மருத்துவ நிபுணர்களை கொண்டு வழங்கப்படுகிறது. பரிசோதனைகள் மட்டுமின்றி, மருத்துவ காப்பீட்டு பதிவு, மாற்றுத் திறனாளி அங்கீகார சான்றிதழ் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன.