• September 8, 2025
  • NewsEditor
  • 0

சிரிக்காத நாள், நம் வாழ்நாளில் வீணான ஒரு நாள் என்று பலரும் கூறிக் கேள்விப்பட்டிருப்போம். சிலர் அறையே அதிரும் அளவுக்கு சிரிப்பார்கள்; சிலரின் புன்முறுவலே அவர்களின் அதிகபட்ச சிரிப்பாக இருக்கும். ஆனால், ஏதாவது ஒரு காரணத்திற்காக எப்படியோ இயல்பாகச் சிரித்துவிடுகிறோம்.

இப்படி இயல்பாக வரும் சிரிப்பிற்கும் தெரபி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா…? அதுதான் லாஃப்டர் தெரபி. அதாவது, சிரிப்பு சிகிச்சை. இது உண்மையிலேயே பயனுள்ளதா…? அதன் பின்னால் இருக்கும் அறிவியலையும் நன்மைகளையும் பற்றி நம்முடன் பகிர்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த லாஃப்டர் தெரபிஸ்ட் மற்றும் உளவியலாளரான ராம்குமார் சேதுபதி.

சிரிப்பு சிகிச்சை

“சிரிப்பு என்பது வெறும் உதடுகளில் நிகழும் நிகழ்வு அல்ல. ப்ரீதிங், ஃபேஷியல் மஸில்கள், சிந்தனை, உணர்ச்சிகள் போன்ற பலவற்றையும் உள்ளடக்கியதே இந்த சிரிப்பு.

அதுமட்டுமல்லாமல், நாம் எந்த உணர்வில் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தக்கூடியதாகவும் சிரிப்பு உள்ளது. அதேபோல், சிரிப்பு சிகிச்சை யோகாவின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

சிரிப்பைப் பற்றி பல சங்க இலக்கியங்களும் கூறியிருக்கின்றன. குறிப்பாக, ’இடுக்கண் வருங்கால் நகுக’ என்று திருக்குறளில் வள்ளுவர் கூறியுள்ளார்.

அதாவது, ’உங்கள் துன்பங்களிலும் சிரியுங்கள்’ என்று பொருள்படும். துன்பத்தில் இருக்கும்போது எப்படி சிரிக்க முடியும் என்று பலரும் கேட்கிறார்கள். ஆனால், சிரிப்பதன் மூலமே நம்மால் துன்பத்தில் இருந்து வெளிவர முடியும்.

லாஃப்டர் தெரபிஸ்ட் மற்றும் உளவியலாளரான ராம்குமார் சேதுபதி
லாஃப்டர் தெரபிஸ்ட் மற்றும் உளவியலாளரான ராம்குமார் சேதுபதி

மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதாரியா 1979-ல் சிரிப்பு யோகாவை அறிமுகப்படுத்தினார்.

1998-ம் ஆண்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மும்பையில் ஒரே இடத்தில் கூட்டி சிரிக்க வைத்து, உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day) உருவாக்கினார்.

1990-ல் இருந்து 2000 வரை உலகெங்கும் பாப்புலரான இந்த சிரிப்பு சிகிச்சை இன்று லாஃப்டர் யோகா, லாஃப்டர் கிளப்ஸ், ஹியூமர் இன்டர்வென்ஷன்ஸ் (humor interventions ) என்று பல வடிவங்களில் மக்களுக்கு பயனளித்துக் கொண்டு வருகின்றது.

அதே நேரம், இது ஒரு கூடுதல் சிகிச்சை தானே தவிர, இதுவே முழுமையான மருத்துவ சிகிச்சைக்கு மாற்று கிடையாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

’லாஃப்டர் தெரபியில இப்படி ஃபோர்ஸ் பண்ணி சிரிக்கணுமான்னு சில பேர் கேப்பாங்க. இயல்பாக சிரித்தால் மனநிலையை மேம்படுத்தும்.

வலிந்து சிரித்தால், ரிலாக்சேஷன் கிடைக்கும். தானாக சிரிக்கிறார்களா அல்லது தெரபியின் மூலம் சிரிக்க வைக்கின்றோமா என்பதைவிட, அவர்களுடைய சம்மதமும் அவர்களுடைய சௌகரியமும்தான் இங்கு முக்கியமாக இருக்கிறது.

அவர்கள் தெரபிக்கு வருகிறார்கள் என்றாலே, அவர்களை எப்படியெல்லாம் ஆரோக்கியமான முறையில் சிரிக்க வைக்க முடியும் என்பதைத்தான் நாங்கள் பார்ப்போம்.

தவிர, ஒருவர் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க எப்போதும் அவர்களுக்கு தெரபி தேவைப்படும் என்பதற்கு எந்த அவசியமும் இல்லை.

சிரிப்பு சிகிச்சை
சிரிப்பு

நான் 2007-ல் இருந்து கேன்சர், எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லாஃப்டர் தெரபி அளித்து வருகிறேன். இது அவர்களுடைய மன அழுத்தத்தையும், அவர்களுடைய குடும்பத்தில் இணக்கத்தையும் அதிகரிக்க செய்கின்றது.

குறிப்பாக கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு லாஃப்டர் தெரபி அதிகமாக உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி சிறிது நேரத்துக்கு அதிகரிக்கும்.

இது இடையூறு இல்லாத உறக்கத்திற்கு உதவுகிறது. லாஃப்டர் தெரபிக்கு பின்னால் இருக்கும் நியூரோகெமிஸ்ட்ரியை பார்த்தோமேயானால் டோபமைன், ஆக்ஸிடோசின், செரட்டோனின், மற்றும் என்டார்ஃபின் ஆகிய மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன.

இதன் விளைவாக கார்ட்டிசால் போன்ற ஸ்டிரெஸ் ஹார்மோன்கள் குறைவாக சுரக்கின்றன.

 தியானம்
யோகா, தியானம் போல…

சுவாசப்பயிற்சி, தியானம், உடற்பயிற்சி போன்று சிரிப்பு சிகிச்சையிலும் நிறைய பலன்கள் இருக்கின்றன.

அதாவது எவ்வளவு ஆக்ஸிஜனை உள்ளே எடுத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு எடுத்துக்கொண்டு, எவ்வளவு கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற முடியுமோ அவ்வளவு வெளியேற்றி விடும்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். அதுபோலத்தான் சிரிப்பும். அளவுக்கு மீறி சிரித்தால் அதுவும் குறிப்பாக ஏதாவது சர்ஜரிக்குப் பிறகோ அல்லது கார்டியோ ரெஸ்பிரேட்டரி (Cardio-respiratory symptoms) அறிகுறிகளோடு சேர்ந்து, கூடவே எல்லை மீறி சிரிப்பு வந்தாலோ அது மிகவும் ஆபத்தானது.

சம்பந்தமே இல்லாமல் அளவுக்கு அதிகமாக சிரிப்பது என்பது தொடர்ந்து வந்தால் நரம்பியல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.

அதனால்தான் நாங்கள், நாள்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள், கர்ப்பிணிகள் தெரபிக்கு வந்தால் அவர்களுடைய மெடிக்கல் ஹிஸ்டரி, ஹெல்த் ஸ்டேட்டஸ் போன்றவற்றை விசாரித்துவிட்டுத்தான் சிகிச்சை கொடுக்க ஆரம்பிப்போம்.

Laughter therapy
Laughter therapy

லாஃப்டர் தெரபியைக் கொண்டே முழுவதுமாக எதையும் குணப்படுத்த முடியும் என்றும், அதிகமாக சிரிக்க ஒரு வாயுவை நுகரச் செய்கிறார்கள் என்றும் பலரும் கூறுவார்கள். ஆனால், அவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

சிரிப்புக்கு இன்று பஞ்சமே இல்லை. ஆனால், அது டாக்ஸிக்கான, உருவ கேலிகளாக இல்லாத பட்சத்தில் மிகவும் நல்லது.

ஒருவரை முகம் சுளிக்க வைத்துவிட்டு, மற்றவர்களை சிரிக்க வைப்பது எந்த வகையிலும் ஆரோக்கியமான நகைச்சுவையாக இருக்க முடியாது.

உருவக் கேலி செய்யாமலும் பிறரை ஏளனம் செய்யாமலும் மற்றவர்களின் எல்லைகளை மதித்தும் நம்மால் சிரிக்க முடியும்; பிறரை சிரிக்க வைக்கவும் முடியும்’’ என்கிறார் லாஃப்டர் தெரபிஸ்ட் ராம்குமார் சேதுபதி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *