
சந்திர கிரகணம்:
இன்று இரவு இந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் இந்த கிரகணத்தின் போது நிலவு செந்நிறத்தில் காட்சியளிக்கும் எனவும் இந்திய வான் இயற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திர கிரகணத்தை ‘பிளட் மூன்’ அல்லது “ரத்த நிலவு” என்று அழைக்கப்படுகிறது.
பூமியின் நிழலில் சந்திரன் கடந்து செல்லும் போது, நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி செல்லும்போது நீல ஒளியை வடிகட்டி, சிவப்பு ஒளி நிலவை நோக்கி வளைக்கப்படுவதால் இது ஏற்படுகிறது.
இன்று இரவு நிகழும் முழு சந்திர கிரகணம்; காணக் கூடிய மக்கள்: இடம்: மெரினா, சென்னை
சூரியனிலிருந்து பூமிக்கு எதிர் பக்கத்தில் நிலவு வரும்போது முழு நிலவு அல்லது பெளர்ணமி ஏற்படுகிறது. அப்போது நம்மை நோக்கி இருக்கும் நிலவின் முழு பக்கமும் ஒளிரும்.
கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு:
இன்றிரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதனையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் சந்திர கிரகணத்தைக் கண்டு ரசிக்க ராட்சத தொலை நோக்கிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிகழ்வினை, விளக்க உரையுடன் ஆராய்ச்சியாளர்கள் முழு சந்திர கிரகணத்தைப் பற்றி எடுத்துரைக்க உள்ளனர். பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது விமானத்தில் செல்பவர்களும் இதனைக் காண முடியும் என்றும், கிரகணத்தைப் பார்ப்பதால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பது உண்மையல்ல என்றும் வான் இயற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.