மலையாளத் திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து, பிரபல இயக்குநர் சித்திக், நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் மீது நடிகைகள் போலீஸில் பாலியல் புகார் அளித்தனர்.
அந்த சமயத்தில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (AMMA), தலைவர் பதவியிலிருந்த மோகன்லால் உட்பட நிர்வாக பதவியில் இருந்த அனைவரும் கூட்டாகப் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அப்போது, இவ்வளவு பாலியல் புகார்கள் வரும்போது அதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில இருக்கும் சங்கம் இப்படி பிரச்னையிலிருந்து விலகுவதா என விமர்சனங்கள் எழுந்தன.
அதற்கு, “மலையாள திரைத்துறையில் சுமார் 21 அமைப்புகள் இருக்கும்போது அவைகளிடம் கேள்வி கேட்காமல் `அம்மா’ அமைப்பிடம் மட்டுமே கேள்வி எழுப்புவது சரியல்ல” என்று மோகன்லால் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக மோகன்லால் மௌனம் கலைத்திருக்கிறார்.

விமர்சனங்கள்
ஏசியாநெட் நியூஸுக்கு அளித்த பேட்டியில் விளக்கிய மோகன்லால், “நான் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டேன். திடீரென்று பலருக்கு நாங்கள் எதிரிகளாகிவிட்டோம்.
இருப்பினும், நாங்கள் ராஜினாமா செய்ததற்கு விமர்சனங்கள் காரணமல்ல. முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது என்று உணர்ந்தபோது நான் ராஜினாமா செய்தேன்” என்று கூறினார்.
கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற AMMA சங்க தேர்தலில் தலைவர் பதவியில் வெற்றி பெற்ற நடிகை ஸ்வேதா மேனன், அம்மா அமைப்பின் 31 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…