
கொல்கத்தாவில் அடுத்தடுத்து பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுவது, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், சட்டக்கல்லூரி மாணவி கல்லூரி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். தற்போது மேலும் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஹரிதேவ்பூர் பகுதியில் 20 வயது பெண்ணின் பிறந்தநாளை, அவரது நண்பர் சந்தன் “பிறந்தநாள் கொண்டாடலாம்” என்று கூறி அழைத்து சென்றார்.
அவளை தீப் என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்று, அங்கே அந்த பெண்ணுக்கான பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
அப்பொழுது மூன்று பேரும் அங்கே சேர்ந்து சாப்பிட்டனர். பின்னர் வீட்டிற்கு செல்வதாக அந்த பெண் தெரிவித்தார்.
ஆனால், அவர் வீட்டிற்கு செல்வதை தடுத்த நண்பர்கள் இரண்டு பேரும் வீட்டு கதவை அடைத்து, அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்.
காலை 10 மணிக்குத்தான் அப்பெண் அங்கிருந்து தப்பி, வீட்டிற்கு சென்றார். அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார், அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அப்பெண் கொடுத்துள்ள புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தன் தனக்கு அறிமுகமானவர் என்றும், சந்தன் பிரபல துர்கா பூஜா கமிட்டியில் தலைவராக உள்ளவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, மூன்று பேரும் அடிக்கடி சந்தித்து பேசுவோம் என்று தனது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தேசிய குற்ற புள்ளிவிவரங்கள் கொல்கத்தாவை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாகக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த தகவல் வெளிவந்த சில நாட்களில், அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.