• September 7, 2025
  • NewsEditor
  • 0

நடுத்தர வயதுப் பெண்களுக்கு வருகிற உடலியல் சிக்கல், அதையொட்டி வருகிற உறவுச் சிக்கல் இரண்டுக்கும் தீர்வு சொல்கிறார் உளவியல் நிபுணர் லஷ்மிபாய்.

உறவுகள்

40 மற்றும் 50-களில் தங்கள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு படித்த பெண்கள் மத்தியில் வந்துவிட்டது என்றே சொல்வேன்.

ஆனால், படித்த பெண்களுக்குக்கூட, 40 மற்றும் 50-களில் ஏற்படக்கூடிய மனநலன் குறித்த விழிப்புணர்வும், அது குறையும்போது ஏற்படக்கூடிய உறவுச்சிக்கல்கள் குறித்த புரிதலும் பெரும்பான்மை பெண்களிடம் இல்லை என்றே சொல்வேன்.

40-களின் இறுதியில் ஆரம்பித்து 50-களின் மத்தியில்தான், பெரும்பாலான பெண்கள் மாமியார் என்கிற உறவு நிலைக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள்.

இந்த வயதுகளில்தான் மத்திம வயது பெண்களுக்கு, ‘என் அழகெல்லாம் போயிட்டிருக்கு’, ‘இளமையெல்லாம் கரைஞ்சிட்டிருக்கு’ என்கிற பதற்றம் மேலோங்கி இருக்கும்.

கூடவே, பிள்ளைகளும் வேலை காரணமாக தள்ளிப்போக ஆரம்பித்திருப்பார்கள். தனிமையில் கையறுநிலை என்பார்களே… அதுபோன்ற மனநிலையில் இருப்பார்கள்.

சரியாக இந்தக் காலகட்டத்தில்தான் மருமகள் என்கிற உறவு வீட்டுக்குள் நுழையும்.

உறவுகள்
உறவுகள்

எதையெல்லாம் தான் தற்போது இழந்துகொண்டிருக்கிறோமோ, அதையெல்லாம் ஒருத்தி அனுபவித்துக்கொண்டிருக்கிறாள் என்கிற உணர்வு, இந்த வயது பெண்களை எக்கச்சக்கமாக எரிச்சலடைய வைக்கும்.

தான் எரிச்சலடைவதற்கு என்னக் காரணம்; அதை எப்படி புறந்தள்ளுவது; இது மத்திம வயதுப் பெண்களுக்கு வருகிற வழக்கமான உளவியல் சிக்கல்தான் தனக்கும் வந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாதவர்கள், மருமகள் மீது எரிச்சல்பட்டு, மகனிடம் கெட்டப்பேர் வாங்கி, குடும்பத்தின் நிம்மதியுடன் தன்னுடைய நிம்மதியையும் கெடுத்துக் கொள்வார்கள்.

இது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், ‘இந்த வயசுல இந்த மாதிரியான நெகட்டிவ் எண்ணங்கள் வர்றது சகஜம்தான். அதை வெளிப்படுத்திக்காம ஜென்டிலா கொஞ்சம் தள்ளி நின்னுக்கலாம்… தான் இருபதுல அனுபவிச்சதைதான் இப்போ மருமக அனுபவிச்சிட்டிருக்கா’ என்கிற புரிதலையும் மனதுக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தப் புரிதல் அத்தனை சுலபமாக வந்துவிடாது. தனிமையில் மனதுக்குள் பேசியோ அல்லது மிகுந்த நம்பிக்கையானவரிடம் தன்னுடைய மனக்கசடுகளைக் கொட்டித் தீர்த்தோ தான் கொண்டு வர முடியும்.

தோழமை
தோழமை

உங்களுடைய உடல்தான் இந்த வயதுகளில் மனச்சோர்வை ஏற்படுத்தும் என்பதால், உடலை அழகுபடுத்தும் விஷயங்களில் முன்பைவிட கூடுதலாக கவனம் செலுத்துங்கள்.

செய்யப் பிடித்திருக்கிறது என்றால், பியூட்டி பார்லர் சென்று சருமத்தையும், கூந்தலையும் அழகுப்படுத்திக்கொள்ளலாம்.

மற்றவர்களின் கேலி, கிண்டலை கண்டுகொள்ளாத இயல்பு கொண்டவர்களென்றால், ஹேர் ஸ்டைலையேகூட மாற்றிக் கொள்ளலாம்.

இதேபோல, உங்கள் ஆடை அலங்காரத்தையும் மாற்றலாம். பூனம் டைப் புடவைகள் கட்டிக்கொண்டிருந்தவர் என்றால், காட்டன் புடவைகள் அணிந்து தோற்றத்தை கம்பீரமாக்கலாம்.

ஷாலுடன்தான் சுரிதார் அணிவீர்களென்றால், தற்போது டிரெண்டில் இருக்கிற சுரிதாரில் உங்கள் தோற்றத்தை இன்னும் ரிச்சாக காட்டும் ஆடைகளை அணிந்துகொள்ளலாம்.

இந்த மாற்றங்கள் எல்லாம் ‘வயசாயிட்டிருக்கே’ என்கிற உங்கள் பயத்தை விரட்டியடிக்கும் சத்து பானங்கள்போல, ட்ரை செய்து பாருங்கள். நிச்சயம் வொர்க் அவுட் ஆகும்.

புரளி பேசாத மனிதர்கள் பூமியில் இல்லை. நிகழ்காலத்தில் பேசவில்லையென்றால், இறந்த காலத்தில் பேசியிருக்கலாம் அல்லது எதிர்காலத்தில் பேசலாம். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.

மத்திம வயதுகளில் பிள்ளைகள் தொடர்பான வேலைப்பளு குறைவதாலோ அல்லது மருமகள் வழி உறவுகள் வீட்டுக்குள் வருவதாலோ அல்லது உங்கள் இயல்பே புரளி பேசுவதாக இருந்தாலோ, அதை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.

புரளி பேசுகிற இயல்புதான், பொறாமை உணர்வையும், பகை உணர்வையும் உங்கள் மனதுக்குள் புகுவதற்கு அனுமதித்து விடும். விளைவு, அத்தனை நாள் உங்களைக் கொண்டாடிய குடும்பத்தினராலேயே உங்கள் மரியாதை குறைவுபடலாம். ஸோ, நோ புரளி, நோ புரளி…

தாம்பத்தியம்
தாம்பத்தியம்

எத்தனை வயதானாலும் காதலையும், கணவரையும் தள்ளி வைக்காதீர்கள். ‘பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க.. இன்னும் என்ன ஒண்ணா படுத்துட்டு…’ என்றே பெரும்பான்மை பெண்கள் நினைக்கிறார்கள். இதை முற்றிலும் தவறு என்றே சொல்வேன்.

இந்த நேரத்தில் பெரிமெனோபாஸ் காரணமாக படபடப்பு, உடம்பு எரிச்சல் என்று ஏதோவொரு உபாதை வந்துகொண்டே இருக்கும். கணவர் அருகே இருந்தால்தான் உங்களுக்கு இப்படியொரு பிரச்னை இருக்கிறது என்றே அவருக்குத் தெரியும்.

இன்னும் சற்று வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், இரவில் திடீரென பெரிமெனோபாஸ் காரணமாக உங்கள் உடம்பில் எரிச்சல் ஏற்படுகிறது என்றால், கணவர் அருகே படுத்திருந்தால்தான் எரிகிற பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவவோ அல்லது லோஷன் தடவவோ முடியும்.

‘பிள்ளைக்கே கல்யாணமாயிடுச்சு...இனிமே தாம்பத்திய உறவெல்லாம் அசிங்கம்’ என்று நீங்களாகவே முடிவெடுத்து விடாதீர்கள். அதை வழக்கம்போலவே தொடருங்கள். இதனால் உங்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?

ஒன்று, கணவருக்கு நம் மீது இன்னமும் அன்பு இருக்கிறது என்கிற பாசிட்டிவ் எண்ணம் வரும். இரண்டு, தாம்பத்திய உறவு கொள்ளும்போது மூளைக்குள் மகிழ்ச்சி ஹார்மோன்கள் வெளிப்படும்.

அவை, உங்கள் ஸ்டிரெஸ்ஸை உங்களிடமிருந்து விரட்டி விடும். மூன்றாவதாக, ‘இன்னும் நாம இளமையாகத்தான் இருக்கோம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும். இதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்…

உறவுகள்
உறவுகள்

இந்த வயதுகளில் இரண்டு வகையான எரிச்சல் வரும். ஒன்று, பிறப்புறுப்பில்… அந்தப்பகுதியின் ஈரத்தன்மைக் குறைவதால் வருகிற பிரச்னை இது.

இதற்கு, ஒரு பொது மருத்துவரையோ அல்லது மகப்பேறு மருத்துவரையோ சந்தித்து, இதற்கான க்ரீமை வாங்கி பயன்படுத்தினாலே சரியாகி விடும்.

இரண்டாவது எரிச்சல், மனதுக்குள் ஏற்படுவது… இது ஹார்மோன்கள் செய்கிற குளறுபடி என்பதால், இதற்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பதைவிட, இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை தெரிந்துகொள்வதுதான் புத்திசாலித்தனம்.

என்னிடம் வருபவர்களுக்கு நான் தந்துக்கொண்டிருக்கிற அதே டிப்ஸையே இங்கேயும் சொல்கிறேன். காரணமில்லாமல் எரிச்சல் உணர்வு வரும்போதே, ‘இப்போ என் உடம்புக்குள்ள என்னவோ பண்ணுது. இத ஹேண்டில் பண்ண முடியலைன்னா எரிச்சலாயிடுறேன் நான். போன தடவை தெரியாம எரிச்சலாயிட்டேன்.

இந்த முறை அப்படி நடக்க அனுமதிக்க மாட்டேன். என்னோட உணர்வு என்னோட கன்ட்ரோல்லதான் இருக்கும்’ என்று மனதுக்குள் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். இதுவொரு முக்கியமான உளவியல் சிகிச்சை.

பொறுப்புகளெல்லாம் குறைந்துவிட்டனதானே, இன்னும் எதற்கு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டும்? குடும்பத்துக்காக பர்ச்சேஸ் செய்வதற்காக மட்டுமே வெளியே சென்று வந்த நீங்கள், இனிமேல் உங்கள் மகிழ்ச்சிக்காக வெளியே சென்று வரலாம். அது கோயிலாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை; ஷாப்பிங் மால் ஆகவும் இருக்கலாம். இதற்கு, உங்களுக்கே உங்களுக்கென ஒரு நட்பு வட்டம் இருக்க வேண்டும்.

வேலைக்கு செல்பவர்களென்றால், நண்பர்களுடன் ஹாலிடேஸ் பிளான் செய்யுங்கள். அது ஒருநாள் டிரிப் ஆக இருந்தாலும், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசியது, சிரித்தது… என அன்றைக்கு அனுபவித்த பாசிட்டிவ் வைப்ரேஷன் பல வாரங்களுக்கு தாக்குப் பிடிக்கும்.

ஹேப்பி மிடில் ஏஜ் பெண்களே..!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *