
மும்பையின் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். 11-வது நாள் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதி நாளான நேற்று காலையில் இருந்து விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்ல ஆரம்பித்தனர். காலையில் இறுதியாக விநாயகருக்கு பூஜை செய்துவிட்டு வாகனங்களில் எடுத்துச்செல்ல ஆரம்பித்தனர். மும்பையில் மிகவும் பிரபலமான லால்பாக் ராஜா விநாயகர் நேற்று காலையில் தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கினார்.
தென்மும்பை முழுவதும் பயணம் செய்து இன்று அதிகாலையில் கிர்காவ் கடற்கரைக்கு சென்றடைந்தது.
வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் லால்பாக் ராஜாவுடன் பயணம் செய்து தரிசனம் செய்தனர். லால்பாக் ராஜா கிர்காவ் கடற்கரைக்கு வந்தபோது அவருக்கு பிரியாவிடை கொடுக்க கடற்கரையில் பல ஆயிரம் பேர் கூடியிருந்தனர்.
மும்பை முழுக்க மேளதாளங்கள், இசை முழங்க பக்தர்கள் விநாயகரைக் கடலுக்கு எடுத்துச்சென்ற காட்சியைக் காணமுடிந்தது. விநாயகர் சிலை கரைப்பைத் தொடர்ந்து நேற்று பெரும்பாலான சாலைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தன. ராட்சத விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுவதைக் காண பக்தர்கள் சாலைத் தடுப்புகள், மரங்கள், கட்டிடங்களின் மாடியில் நின்று பார்த்தனர். ஊர்வலப் பாதையில் அதிகமான அமைப்புகள் பக்தர்களுக்குப் பிரசாதத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.
தென்மும்பையில் உள்ள சிஞ்ச்பொக்லியில் அதிக அளவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இதனால் தென்மும்பையில் உள்ள பெரும்பாலான சாலைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தன. மும்பை முழுவதும் கணபதி பப்பா மோர்யா என்ற வார்த்தை விண்ணை முட்டும் அளவுக்கு முழங்கியது. நேற்று இரவு வரை 5855 ராட்சத விநாயகர் சிலைகள் கிர்காவ், தாதர், மாகிம், ஜுகு போன்ற கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. இது தவிர வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 26 ஆயிரம் விநாயகர் சிலைகள், 307 கெளரி சிலைகள் கடல் மற்றும் செயற்கை குளத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகளுக்கு பூமழை பொழிய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நேற்று முழுவதும் மும்பையில் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இறுதிநாள் விநாயகர் சிலை கரைப்பைப் பார்க்க இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து கூட பக்தர்கள் வந்திருந்தனர்.

விநாயகர் சிலை பாதுகாப்புப் பணியில் 25 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மும்பை அருகில் உள்ள சஹாப்பூர் என்ற இடத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது ஒருவர் ஆற்றுக்குள் விழுந்துவிட்டார். அவரை மீட்க 4 பேர் ஆற்றில் குதித்தனர். ஆனால் அவர்கள் 5 பேரையும் தண்ணீர் இழுத்துச் சென்றுவிட்டது.
புனேயில் பிரபலமான கஸ்பா பேட் பகுதி விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் அஜித்பவார், மத்திய அமைச்சர் முரளிதர் மற்றும் மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் போன்றோர் கலந்துகொண்டனர். இதே போன்று மகாராஷ்டிராவின் மற்ற பகுதிகளிலும் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி உற்சாகமாக நடந்தது. புனேயில் விநாயகர் சிலை கரைப்புக்கு 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விநாயகர் சிலை கரைப்பு இன்று அதிகாலை வரை மும்பை, புனேயில் நடந்தது.