
“அதிமுகவில் பெரிய சலசலப்பு ஒன்றுமில்லை, நண்பர் எடப்பாடி பழனிசாமி விவரமானவர், இந்நேரம் முடிவு எடுத்திருப்பார்” என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு பாராட்டும் வகையில் பேசியுள்ளார்.
மதுரையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோருடன் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
“190 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த நிலையில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதமானது. தற்போது மேம்பாலப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மதுரையின் மற்ற பகுதிகளிலும் 65 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. தமிழ் வளர்த்த மாமதுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன” என்றவரிடம்,
‘அதிமுகவில் செங்கோட்டையனால் ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்து’ கேட்டதற்கு
“அதிமுகவில் பெரிய சலசலப்பு ஒன்றும் இல்லை. அவர்கள் கட்சிப் பிரச்சனையில் கருத்து கூறுவது சரியாக இருக்காது. ஆனாலும்கூட கட்சியின் இன்றைய தலைவரும் நண்பருமான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். என்னுடைய அனுபவத்தில் எந்தத் தலைமையாக இருந்தாலும் ஒரு தீர்க்கமான முடிவை பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டி முடிவெடுப்பார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி விவரமானவர், இந்நேரம் முடிவு எடுத்திருப்பார்” என்றார்.

‘எடப்பாடி பழனிசாமி விவரமானவர், இந்நேரம் முடிவு எடுத்திருப்பார்’ என்று எ.வ. வேலு கருத்து தெரிவித்த சிறிது நேரத்தில், செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.