
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள தெளரலா என்ற கிராமத்துப் பெண்கள் இப்போது அதிர்ச்சியில் இருக்கின்றனர். தனியாகச் செல்லும் பெண்கள் முன்பு திடீரெனத் தோன்றும் நிர்வாண கேங்க் அவர்களை ஆளில்லாத இடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்து வருகிறது. அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் முன்பு திடீரென வந்த இரண்டு பேர் அப்பெண்ணை அருகில் உள்ள தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றனர்.
அப்பெண் அவர்களிடம் போராடி தன்னை விடுவித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடி வந்துவிட்டார். அவர் ஓடி வந்து கிராமத்தினரிடம் புகார் செய்தார். கிராமத்தினர் அத்தோட்டத்திற்கு சென்று தேடிப் பார்த்தனர்.
ஆனால் யாரையும் காணவில்லை. அப்பெண்ணிடம் இரண்டு பேரும் எப்படி இருந்தார்கள் என்று விசாரித்தபோது இருவரும் ஆடை அணியாமல் நிர்வாணமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு பிறகு அக்கிராமத்திற்கு வேலைக்கு செல்வதையே அப்பெண் கைவிட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்கிறார். இது போன்று நடப்பது இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. ஆனால் வெளியில் சொன்னால் அவமானம் என்று கருதி பெண்கள் வெளியில் சொல்லாமல் இருந்தனர் என்றும், இது நான்காவது சம்பவம் என்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர குமார் தெரிவித்தார். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது.
உடனே போலீஸார் சம்பவம் நடந்த கிராமத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். கிராமத்தை சுற்றி ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கின்றனர். ஆனால் இதுவரை யாரும் சிக்கவில்லை. அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பெண் போலீஸாரும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் விபின் தெரிவித்தார். முன்னதாக விபினும் சம்பவம் நடந்த கிராமத்தைப் பார்வையிட்டார். இக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் தனியாகச் செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.