
தமிழ்நாட்டில் தற்போது அரசியல் களத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க இணைந்த என்.டி.ஏ கூட்டணியில் நடைபெறும் சம்பவங்கள் பேசுபொருளாக உள்ளன.
முதலில், கூட்டணியிலிருந்து ஓ.பி.எஸ் வெளியேறினார். அதையடுத்து, அ.தி.மு.க-விலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த செங்கோட்டையன், அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மறுபுறம், என்.டி.ஏ கூட்டணியிலிருந்து டி.டி.வி தினகரனும் வெளியேறியதால் கூட்டணியின் நிலைமை பரபரப்பாகியுள்ளது.
இத்தகைய சூழலில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று (செப்டம்பர் 7) சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கான காரணங்களைப் பற்றி பேசிய டி.டி.வி தினகரன் கூறியதாவது:
“2024-ல் மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காகத்தான் என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்தோம். அண்ணாமலையோடு இணைந்து அந்த கூட்டணியில் பயணித்தோம்.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு. ஒரே ஒரு நபர் (எடப்பாடி பழனிசாமி) மற்றும் அவரிடம் உள்ள சிலரை எதிர்த்தே இந்த இயக்கத்தை நாங்கள் ஆரம்பித்தோம்.
அவர்கள் திருந்துவார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பதால் வெளியேறி விட்டோம்.
இதற்கு நயினார் நாகேந்திரனோ அல்லது இந்த கூட்டணியை அமைத்தவர்களோ காரணமில்லை. எங்கள் தொண்டர்களின் அழுத்தம்தான் இதற்கு காரணம்.”
“அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைவது, அம்மாவின் கட்சிக்கு நல்லது.
அங்குள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் இதற்கு மேலும் விழித்துக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் ஆட்சிக்கு வருவது கனவாகத்தான் போகும்.
நாங்கள் உறுதியாக ஆட்சி அமைக்கக் கூடிய கூட்டணியில் இருப்போம்.
எதைச் சரி செய்தால் என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க சேரும் என்பதை டெல்லியில் இருப்பவர்கள் யோசிக்க வேண்டும்.
அண்ணாமலைதான் எங்களை கூட்டணிக்குள் கொண்டு வந்தார். அவரை நீக்கியது எங்களுக்கு உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது.
இப்போது நாங்கள் விலகுவதற்கு நாங்கள் காரணமல்ல.”
“ஓ.பி.எஸ். விஷயத்தில் இங்குள்ள மாநிலத் தலைவரின் ( நயினார் நாகேந்திரன்) செயல்பாடு எனக்கு மனவருத்தத்தை கொடுத்தது.
அப்பட்டமான ஒரு பொய்யை ஆணவத்தோடு பேசும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள் நாங்கள் அல்ல. அவருக்கு நடந்தது நாளை எனக்கும் நடக்கும்.
நாங்கள் சிறியவர்கள், பெரியவர்கள் வந்துவிட்டார்கள் என்ற மனநிலையில் அவர்கள் இருந்தால், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.
நாங்கள் இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக ஆட்சியமைக்கும். எங்களுக்கான கதவுகள் திறந்திருக்கின்றன. அரசியலில் எதுவும் நடக்கலாம்.
செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி. அது வெற்றி பெற வாழ்த்துகள். தேவைப்பட்டால் அவருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்,” என்று டி.டி.வி தினகரன் கூறினார்.