
“ஓபிஎஸ்-சும் நானும் கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுதான்” என்று மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அமமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் சுதந்திரமானவன். அமமுக எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி.
பழனிசாமியை முதல்வராக நான் ஏற்றுக் கொள்வேன் என்று பிறர் நினைத்தது என் தவறல்ல. அமித்ஷா தான் எல்லோரையும் ஓரணியில் இணைக்க வேண்டும் என முயற்சி செய்தார். கூட்டணியில் சமரசம் ஏற்பட ஓபிஎஸ்சுடன் பேசத் தயார் என நயினார் நாகேந்திரன் இப்போது சும்மா பேசுகிறார்.
அதிமுகவுடன் அமமுக தொண்டர்கள் ஒத்து போக மாட்டார்கள். அதிமுகவைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வர் ஆவார் என அமித்ஷா கூறினார். அவர் கூறும் முதல்வர் வேட்பாளரை நாங்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தான் ஆதரிப்போம் என ஏற்கனவே கூறியிருந்தேன். நாங்கள் எப்படி பழனிசாமியை ஏற்றுக் கொள்ள முடியும்?
ஓபிஎஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது எடுக்காமல் தவிர்த்த நயினார் நாகேந்திரன், இப்போது சமரசம் பேசுவதாக அழைப்பது அகங்காரம் மற்றும் ஆணவத்தை காட்டுகிறது.
`எனக்காக விட்டு கொடுத்தவர் ஓபிஎஸ்’

எனக்காக தேனி தொகுதியை விட்டு கொடுத்தவர் ஓபிஎஸ். நானும் ஓபிஎஸ்-சும் ஒன்றாக பயணிப்போம். அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது, சுயக் கௌரவம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவருக்காக நான் குரல் கொடுப்பேன்.
நாங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றதற்கு அண்ணாமலை காரணமல்ல. அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தபோது கூட்டணி கட்சி தலைவர்களுக்கு உரிய மரியாதை அளித்தார். எங்கள் பின்நிலையில் அண்ணாமலை இருப்பதாக அரசியல் தெரியாதவர்கள் கூறுகின்றனர்.
நயினார் நாகேந்திரன்
எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்பது தற்கொலைக்கு சமம். எடப்பாடி மட்டும் போதும் என நயினார் நாகேந்திரன் நினைக்கிறார். தமிழக மக்களின் மனநிலை அவருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் புரியவில்லை.

எங்கள் வழியில் நாங்கள் செல்கிறோம். தொண்டர்களின் முடிவைத் தாண்டி நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. தொண்டர்களின் எதிர்காலத்தை கருதி நான் நல்ல முடிவு எடுப்பேன்.

தவெக விஜய்
எங்களை விமர்சிக்காத வரை விஜய்யை நாங்கள் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் மக்கள் விரும்பும் நடிகர். அவரைப் பார்த்து பொறாமைப்பட தேவையில்லை.
நீங்கள் நினைக்காத கூட்டணி எல்லாம் அமைக்க வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் இடம் பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்.
நடிகர் விஜயகாந்தைப் போல ஒரு அரசியல் தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என்பது யதார்த்தம்.

`நாங்கள் பொறுப்பல்ல’
துரோகம் செய்த எடப்பாடியுடன் உள்ள சிலரைத் தவிர பிறர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்கள் தொடர்ந்து அமைதி காத்தால், வரும் தேர்தலுக்குப் பின்னர் பெரும் பின்னடைவை சந்திப்பார்கள்.
தேர்தலுக்கு முன்னரே விழித்துக் கொள்ளுங்கள். எங்களிடம் பண பலம் இருக்கிறது, இரட்டை இலை சின்னம் இருக்கிறது என எண்ணி தேர்தலை சந்தித்தால், அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது,” என்றார்.