
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், “அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும்.
10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்” என்று நேற்று முன்தினம் (செப்.5) கறாராகப் பேசியிருந்தார்.
சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் ‘அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டும்’ என்ற கருத்தைத்தான் பெயர் குறிப்பிடாமல் அவர் வலியுறுத்தி இருந்தார்.
செங்கோட்டையன் இந்தக் கருத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து அதிமுகவில் அவர் வகித்து வந்த அத்தனை பொறுப்புகளில் இருந்து விடுக்கப்பட்டார்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அவர் மட்டுமல்லாமல் அவரின் ஆதரவாளர்களின் பொறுப்புகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்திருக்கிறார். ஆனால், செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த முன்னாள் அதிமுக எம்.பி. சத்தியபாமாவின் பதவி பறிக்கபடாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சத்தியபாமா, ” அதிமுகவில் என் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன், நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.
அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக தொண்டர்கள், மக்களின் எண்ணங்களை செங்கோட்டையன் பிரதிபலித்திருக்கிறார். 2026 தேர்தலில் அதிமுக வென்றால்தான் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை நிறைவேற்றலாம்” என்றார்.