
Doctor Vikatan: மூட்டுவலி (Arthritis) உள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா, எந்த வகையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். வாக்கிங் செய்யலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சிகள் அவசியம். ஆனால், அதற்கு முன் அவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
மூட்டுவலியின் தன்மை, அதன் தீவிரம் போன்றவற்றை மருத்துவரிடம் சொல்லி, அதற்கேற்ப அவரது ஆலோசனையைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
உடற்பயிற்சிகள் செய்யலாம் என மருத்துவர் சொல்லும் பட்சத்தில், லோ இம்பேக்ட் வொர்க்அவுட் (Low Impact Workout) செய்ய ஆரம்பிக்கலாம்.
லோ இம்பேக்ட் வொர்க்அவுட் என்பது, மூட்டுகள் மற்றும் எலும்புகளில் அதிக அழுத்தம் கொடுக்காத உடற்பயிற்சிகளைக் குறிப்பது.
மூட்டு இணைப்புகளில் வலி இருப்பதால், சம்பந்தப்பட்ட நபரால், மற்ற எல்லோரும் செய்கிற வழக்கமான பயிற்சிகளைச் செய்ய முடியாது. அந்த வகையில் இவர்களுக்கு நீச்சல் பயிற்சி மிகவும் சிறந்தது.
சைக்கிளிங் பயிற்சி செய்யும்போதும், அந்த அசைவுகள் ஓகே என்று மருத்துவர் சொல்லும் பட்சத்தில் அதையும் செய்யலாம். வாக்கிங்கும் செய்யலாம்.

மூட்டுவலி ஓரளவு குணமானதும், பொறுமையாக மற்ற பயிற்சிகளையும் அதாவது ஸ்ட்ரென்த்தனிங் பயிற்சிகளைச் செய்யத் தொடங்கலாம்.
உங்கள் மூட்டுகள் வலிமை பெற்றதாக உணரும்போது மற்ற பயிற்சிகளையும் உடற்பயிற்சி ஆலோசகர் அல்லது பிசியோதெரபிஸ்ட்டின் ஆலோசனையோடு செய்யலாம்.
வலி இருக்கும்போது, மூட்டுகளில் அழுத்தம் விழாதபடி, பிசியோதெரபிஸ்ட், உங்களுக்கான பிரத்யேக பயிற்சிகளை சொல்லித் தருவார்.
ஏற்கெனவே குறிப்பிட்ட ‘லோ இம்பேக்ட் வொர்க் அவுட்’டில் உங்களுக்கு எது சௌகர்யமாக உள்ளதோ, அதைச் செய்யலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.