
சென்னை: கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2-வில் உயிரியல் அல்லது தாவரவியல்- விலங்கியல் பாடங்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
இதுதொடர்பாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயலர் என்.சுப்பையன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர்- கிரேடு 2 (Livestock Inspector) நேரடி நியமனமும் பதவி உயர்வும் 9:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும். நேரடி நியமனத்துக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு பிளஸ் 2-வில் உயிரியல் பாடம் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும்.