
சென்னை: லண்டனில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், இந்துஜா குழுமத்துடன் ரூ.7,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வரின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் மூலமாக தமிழகத்துக்கு ரூ.15,516 கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ‘டிஎன் ரைசிங்’ என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதல் கட்டமாக ஜெர்மனிக்கு சென்ற முதல்வர் அங்கு முதலீட்டாளர்கள், தொழில் நிறுவன நிர்வாகிகளை சந்தித்தார். இதை தொடர்ந்து, 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.7,020 கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன்மூலம் 15,320 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.