
திண்டுக்கல்லில் வர்த்தகர் சங்கம் உட்பட 17 சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி , “திமுக ஆட்சியில் அதிகப்படியான வரி விதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். அனைவரின் குறைகளையும் மனுவாக கொடுங்கள். நீங்கள் கொடுத்த மனுக்களை அதிமுக ஆட்சி அமைத்த பின்பு செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள் சங்கம்
நானும் ஒரு விவசாயிதான். விவசாய குடும்பத்திலிருந்து தான் வந்திருக்கிறேன். தற்போதும் எனக்கு விவசாயமே தொழில். அதிமுக ஆட்சியில் இரண்டு முறை பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளோம். விவசாயிகள் மோட்டர் இயக்குவதற்கு மும்முனை மின்சாரம் கொடுத்துள்ளோம். திண்டுக்கல்லில் உள்ள மஞ்சளாறு உட்பட அனைத்து அணைகளும் அதிமுக ஆட்சி அமைந்ததும் தூர்வாரப்படும். அதே போல வன்னியர் கிறிஸ்துவ மக்களை சீர் மரபினர் வகுப்பில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் இது குறித்து பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும்.
தோல் தொழிற்சாலை

தோல் தொழிற்சாலைகள் வரி உயர்வினால் தொழில் முடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதையும் மத்திய அரசுடன் பேசி இந்த தொழில் புத்துயிர் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஹோட்டல் உரிமையாளர்கள்

திண்டுக்கல்லில் ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். தற்போது ரவுடிகள் ராஜ்ஜியம் செய்வதாக சொல்லியுள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் போதைப்பொருள் அதிகமானது தான். போதைக்கு அடிமையாகி என்ன செய்வது என தெரியாமல் கொலை கொள்ளை திருட்டு வழிப்பறி பாலியல் வன்கொடுமை மற்றும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால் உரிமையாளரை அடிப்பது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்றார்.