
மும்பை போக்குவரத்து காவலர் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் ஆப் எண்ணிற்கு நேற்று ஒரு வெடிகுண்டு மிரட்டல் மெசேஜ் வந்தது. அதில் மும்பையில் கணபதி சிலை கரைப்பின் போது தாக்குதல் நடத்த 400 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளுடன் 14 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து நுழைந்திருப்பதாகவும், அவர்கள் 34 வாகனங்களில் அவற்றை வைப்பார்கள் என்றும் அந்த மிரட்டல் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீஸார் இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று அடையாளம் காணப்பட்டது.
மிரட்டல் விடுத்த நபர் நொய்டாவில் இருப்பது தெரிய வந்தது. உடனே அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நபர் பெயர் அஸ்வினி என்று தெரிய வந்துள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த அவர் கடந்த 5 ஆண்டுகளாக நொய்டாவில் வசித்து வந்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது தன்னை ஜோதிடர் என்று குறிப்பிட்டுள்ளார். நொய்டா போலீஸார் அவரை கைது செய்து மும்பை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மும்பையில் இன்று விநாயகர் சதுர்த்தியின் இறுதி நாளாகும். இதையடுத்து மும்பை முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகிறது. இன்று இரவு ஆயிரக்கணக்கான சிலைகள் கடலில் கரைக்கப்படும். இதற்காக கிர்காவ், ஜுகு, தாதர், மாகிம் பகுதி கடற்கரைகளில் முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சிலை கரைப்பு பணியில் 25 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள்ளனர். கண்காணிப்பு கேமரா மற்றும் ட்ரோன்கள் மூலம் விநாயகர் சிலை கரைக்கப்படும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிலை கரைப்பையொட்டி நகரில் பல இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.