
தவெக தலைவர் விஜய் வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்யும் முடிவில் இருக்கிறார். திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு காவல்துறையிடம் அனுமதி கடிதமும் தவெக சார்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், விஜய்யின் சுற்றுப்பயணத்தை திமுக அரசும் காவல்துறையும் தடுக்க நினைப்பதாக அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
ஆதவ் அர்ஜூனா X தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், தி.மு.க அராஜக அரசுக்கு எதிராக இயக்கம் கண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தபோது அதை தங்கள் அதிகாரம் கொண்டு அடக்க நினைத்தது அன்றைய ஆளும் அரசு. அந்த அதிகார சக்திகளின் ஆட்டத்திற்கு அடுத்தத் தேர்தலிலேயே முடிவுரை எழுதினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
இன்று எங்கள் தலைவரும் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையுமான த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் சுற்றுப்பயணத்தை தடுக்கும் நோக்கில் தங்கள் அதிகார பலத்தைக் கொண்டு காவல்துறையின் மூலம் நெருக்கடி கொடுக்க முனைகிறது இன்றைய தி.மு.க அரசு. மக்கள் தலைவராக திரு.விஜய் அவர்களுக்கு இருக்கும் பேராதரவை பொறுத்துக்கொள்ள முடியாத அச்சத்தின் வெளிப்பாடாகவே அரசின் இந்த அதிகார அழுத்தத்தை பார்க்கவேண்டியுள்ளது.

ஜனநாயக நாட்டில் எந்தத் தலைவரும் மக்களை சந்திப்பதை எப்பேர்ப்பட்ட அதிகார சக்தியாலும் தடுக்க முடியாது. அப்படி தடுக்க நினைத்த அதிகார சக்திகளை மக்களே தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் பாடம். மக்களே மகத்தான ஆசான்கள்… அவர்களே உங்கள் அதிகாரத்திற்கு முடிவுரை எழுதுவார்கள்.’ எனக் கூறியிருக்கிறார்.