
கடந்த வாரத்தில், சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடந்தது.
எல்லைப் பிரச்னை காரணமாக, கடந்த ஏழு ஆண்டுகளில் சீனா செல்லாத இந்திய பிரதமர் மோடி, இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான சீனா சென்றிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ரஷ்யா உடன் வர்த்தகம் செய்வதற்காக இந்தியா மீது கூடுதல் 25 வரியை விதித்தது ட்ரம்பின் அமெரிக்க அரசு. இந்த வரி விதிப்பிற்கு பிறகு, சீனாவில் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து கொண்டனர்.
மோடி, புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மூவரும் இந்த மாநாட்டில் மிகவும் இணக்கமாகவும், ஒற்றுமையாகவும் நடந்துகொண்டது மிகவும் கவனிக்கப்பட்டது.
அமெரிக்கா vs சீனா
கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவிற்கு போட்டியாக, சீனா வேகமாக வளர்ந்து வருகிறது.
கடந்த 2024-25 நிதியாண்டில், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் கிட்டத்தட்ட 30 டிரில்லியன் டாலர்கள் ஆகும்.
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் சுமார் 19.23 டிரில்லியன் டாலர்கள் ஆகும். இந்த இரு நாடுகளும் தான் டாப் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்தது.
என்ன தான், அந்த நிதியாண்டில், அமெரிக்காவை விட, சீனா குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி திறனைப் பெற்றிருந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் சீனா அமெரிக்காவை முந்தி சென்றுவிடும் என்று கூறப்படுகிறது.
வளரும் இந்தியா!
இந்த சூழ்நிலையில் தான், சீனாவிற்கு போட்டியாக, ஆசிய நாடுகளில் இருந்து வந்த இந்தியாவைப் பகைத்து கொண்டது அமெரிக்கா.
ஆசிய நாடுகளில் சீனாவிற்கு போட்டியாக இருந்துவரும் ஒரு நாடு இந்தியா.
குறைந்த ஊதியத்தில் ஏகப்பட்ட தொழிலாளர்கள், வளரும் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மிகுந்த தொழிலாளர்கள் என இந்தியா வளர்ச்சி பாதையில் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.
சீனாவை விட, இந்தியாவிற்கு இருக்கும் மிகப்பெரிய பிளஸ், ‘இந்தியாவின் இளைஞர்கள் தொகை’. சீனாவின் மக்கள்தொகைக்கு ஒப்பீட்டளவில் அதிக வயதாகி கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் பெரும்பாலான மக்கள்தொகை இளைஞர்களாக இருக்கிறார்கள்.
அதனால், கடந்த சில ஆண்டுகளாக, சீனாவை எதிர்க்க இந்தியா உடன் நட்பு மற்றும் ஆதரவாக பழகி வந்தது அமெரிக்கா.
ரஷ்யாவின்…
ஆனால், உக்ரைன் போரை நிறுத்த எடுத்த முனைப்பில், ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க, இந்தியா மீது கூடுதல் வரியை விதித்தது அமெரிக்கா.
இந்தியா அடிப்பணியும் என்று நினைத்த அமெரிக்காவின் நினைப்பிற்கு மாறாக, இந்தியா ரஷ்யாவிடம் வணிகம் செய்வதை தொடர்ந்து வருகிறது.
மேலும், சீனா உடன் இப்போது மீண்டும் உறவைப் புதுப்பிக்கத் தொடங்கியுள்ளது இந்தியா.
இது அமெரிக்காவிற்கு இரட்டை அதிர்ச்சி.
ட்ரம்பின் மாற்றம்
இதையொட்டி, நேற்று, ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், “ஆழமான மற்றும் இருண்ட சீனாவிடம் இந்தியா மற்றும் ரஷ்யாவைத் தொலைத்துவிட்டது போல இருக்கிறது. அவர்களுக்கு ஒன்றாக நீண்ட மற்றும் வளமான எதிர்காலம் இருக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இது ‘எங்கிருந்தாலும் வாழ்க’ டோனில் இருக்கிறது.
அடுத்ததாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் எப்போதும் ஸ்பெஷலான உறவு உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.
இவை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது, இந்தியா – சீனா – ரஷ்யா உறவினால் ட்ரம்பிற்கு பயம் எழுந்துள்ளதா… இந்தியா மீதான ட்ரம்பின் கிடுக்குபிடி குறைகிறதா போன்ற கேள்விகள் எழுகிறது.