• September 6, 2025
  • NewsEditor
  • 0

டெல்லி செங்கோட்டையில் ஒவ்வோர் ஆண்டும் ஜெயின் மத நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் செங்கோட்டை வளாகத்தில் தஸ்லக்ஷன் மஹாபர்வ் என்ற ஜெயின் ஆன்மிக நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி வரும் 9ம் தேதி வரை நடைபெறும். இவ்விழாவிற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைக்கப்பட்டு இருந்தார். இவ்விழாவிற்கு தொழிலதிபர் சுதிர் ஜெயின் என்பவர் தனது வீட்டில் இருந்த தங்க கலசங்களை எடுத்து வந்திருந்தார். அவற்றை பூஜை நடைபெறும் இடத்தில் வைத்திருந்தார். இரண்டு தங்க கலசங்களின் மதிப்பு ரூ.1.5 கோடியாகும். அந்த தங்க கலசத்தின் மீது வைரம் மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டு இருந்தது.

விழாவிற்கு முக்கிய விருந்தினர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வரவேற்றுக்கொண்டிருந்தனர்.

அனைவரும் வந்த பிறகு ஆன்மிக நிகழ்ச்சியை தொடங்கியபோது தங்க கலசங்களை தேடினர். ஆனால் பூஜை நடக்கும் இடத்தில் இருந்து அது காணாமல் போய் இருந்தது. இதனால் அங்கு அனைத்து இடத்திலும் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஆன்மிக மதகுரு வேடத்தில் வந்த ஒருவர், அந்த தங்க கலசங்களை ஒரு பையில் எடுத்து தோளில் போட்டுக்கொண்டு சர்வசாதாரணமாக நடந்து செல்வது பதிவாகி இருந்தது.

இது குறித்து சுதிர் ஜெயின் கூறுகையில், ”கூட்டத்தை சாதகமாக்கிக் கொண்டு திருடி சென்று இருக்கிறான். கலசத்தில் இருந்த ரத்தினங்கள் அழகிற்காக மட்டுமே இருந்தது. ஆனால் கலசம் எனது மத உணர்வுகளோடு தொடர்புடையது. அதனை மதிப்பிட முடியாது” என்று கூறினார். குற்றவாளி குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைவில் திருடன் பிடிபடுவான் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்தனர். தங்க கலசத்தை திருடிய நபர் இதற்கு முன்பு மூன்று கோயில்களில் திருட முயற்சி செய்ததாக சுதிர் ஜெயின் உறவினர் புனீத் ஜெயின் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வந்து சென்ற பிறகு இத்திருட்டு நடந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *