• September 6, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மும்பையில் தனது முதல் ஷோரூமை கடந்த ஜூலை 15ம் தேதி திறந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் திறக்கப்பட்ட இந்த ஷோரூம் மூலம் இது வரை 600 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் விற்பனை செய்யப்படும் கார்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதுவரை புக்கிங் மட்டுமே பெற்று வந்த டெஸ்லா ஷோரூம், தனது முதல் காரை டெலிவரி கொடுத்துள்ளது.

மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் இந்த ஷோரூமில் நேற்று காலை நடந்த விழாவில் முதல் கார் டெலிவரி செய்யப்பட்டது.

முதல் காரை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் டெலிவரி எடுத்துக்கொண்டார். காரை டெலிவரி எடுத்துக்கொண்ட அமைச்சர் பிரதாப் சர்நாயக் இது குறித்து அளித்த பேட்டியில், ”பசுமை போக்குவரத்தில் இது ஒரு மைகல்லாகும். முதல் டெஸ்லா காரை வீட்டுக்கு கொண்டு செல்வதில் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார். இந்தியாவில் ஒய் மாடல் மட்டுமே இப்போது விற்பனைக்கு வந்திருக்கிறது. ஒய் மாடல் கார்கள் ரூ.59.89 லட்சம் முதல் ரூ.68.89 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது டெலிவரி கொடுக்கப்பட்டுள்ள கார் எந்த மாடல் என்று தெரியவில்லை. வாடிக்கையாளர்கள் தானியங்கி டிரைவிங் வசதியுள்ள கார்களையும் முன்பதிவு செய்யலாம். ஆனால் அதற்கு கூடுதலாக ரூ.6 லட்சம் செலவிட வேண்டியிருக்கும். டெஸ்லா கார்களுக்கு சார்ஜ் செய்ய பிரத்யேக சூபர்சார்ஜர் வசதி கடந்த 4ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் சார்ஜ் செய்தால் வெறும் 30 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். காரை ஸ்டார்ட் செய்த 6 விநாடியில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட முடியும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *