
இவ்வுலகில் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது ‘பசி’. சில மனிதர்களுக்கு உணவு என்பது பல நாள், பல நேரம் எட்டாக்கனியாகவே இருக்கிறது.
நம் நாடு உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக, அடுத்த நிதியாண்டில் உருமாற உள்ளது. ஆனால், 2024-ல் வெளியான Global health index-ன் தரவுகள்படி, ஊட்டச்சத்துக் குறைந்த உணவுகளை சாப்பிடும் மக்கள் உள்ள 127 நாடுகளில் இந்தியா 105-வது இடத்தில் உள்ளது. அரசாங்கம் கவனிக்க மறந்த மக்களின் பசியை, பெரும் பொருட்டாக மதித்து அடுத்தவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கிற எத்தனையோ தனி நபர்கள் இருக்கிறார்கள்; எத்தனையோ குழுக்கள், அமைப்புகள் இருக்கின்றன. இதேபோல, சாலையோரமாக வசிக்கும் வீடற்ற மக்களுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், தங்களால் முடிந்த அளவிற்கு உணவுப் பொட்டலங்களை வழங்கும் ’நண்பர்கள் குழு’ ஒன்று மதுரையில் செயல்பட்டு வருகிறது.
பொதுவாக நண்பர்கள் ஒன்றாக சேர்ந்தால் ஊர் சுத்துவது, லூட்டி அடிப்பது, இயல்பு. ஆனால், அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை, ஒன்றாக சேர்த்து மனிதர்களின் பசி தீர்க்கும் நற்செயலுக்காக ஓர் அறக்கட்டளையை நிறுவி, செயல்படுவது என்பது உண்மையான நட்பின் ஆத்மார்த்தம். அப்படி 18 பேர் கொண்ட நண்பர்கள் குழு ஒன்றாக சேர்ந்து ஆரம்பித்த அறக்கட்டளையின் பெயர்தான் ’இணை நண்பர்கள்.’ இதன் செயலாளர் சரத்திடம் பேசினோம்.
“நாங்க 18 பேரும் ஒருத்தன் பிஸினஸ், ஒருத்தன் ஐடின்னு வேற வேற வேலைகள் செஞ்சிட்டிருக்கோம். கோவிட் டைம்ல, ஊரே அடங்கியிருந்த நேரத்துல ரோட்டுல இருக்கிறவங்களுக்கு யாரு சாப்பாடு தருவான்னு யோசிச்சோம். அப்புறம், ஏன் நம்மளே கொடுக்கக்கூடாதுன்னு செய்ய ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் நானும், ராம்குமார் அப்படிங்கிற இன்னொரு நண்பரும், எங்களோட 20 வருஷமா நட்பா இருக்கிற எல்லா நண்பர்களையும் ஒண்ணா சேர்த்து இதை அறக்கட்டளையா மாத்தி 4 வருஷமா செயல்பட்டுட்டு இருக்கோம். ராம்குமார் இப்போ பெல்ஜியம்ல இருக்காரு.

வாராவாரம் ஞாயித்துக்கிழமைல கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல சாப்பாடு கொடுக்கிறோம். ஆரப்பாளையம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், செல்லூர், சிம்மக்கல், ஜெய்ஹிந்த்புரம்னு ரோட்டு ல இருக்கிறவங்களா பார்த்து பார்த்துதான் சாப்பாடு கொடுப்போம். ஏன்னா, எல்லாரும் வேலைக்குப் போய் சம்பாதிக்கிற காசைதான் ஆளுக்குக் கொஞ்சம் போட்டுதான் இத செஞ்சிக்கிட்டிருக்கோம். பசியோட இருக்கிறவங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறப்போ, அத வாங்கிட்டு அவங்க வாழ்த்துறதுலயே எங்களுக்கு மனசு நெறஞ்சுரும். நாங்க இது மட்டும் செய்யல, பள்ளிக்கூடங்கள்ல போய் மாணவர்களுக்கு மரம் நடுதல் பற்றின விழிப்புணர்வு ஏற்படுத்தி விதைகள் கொடுக்கவும் செய்றோம்.
எங்களோட வருங்கால இலக்கு படிக்க முடியாத குழந்தைகள படிக்க வைக்கிறதும், வேலையின்மைனால் பாதிக்கப்படுற மக்களுக்கு எங்களால முடிஞ்ச அளவுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்குறதும்தான். அதுமட்டுமில்லாம வாராவாரம் இப்பிடி சாப்பாடு கொடுக்க போறப்போ, ஏரியால இருக்க சின்ன பசங்கள்ல யாரையாச்சும் கூட்டிட்டுப் போவோம். ஏன்னா இல்லாதவங்களுக்கு நம்மளால முடிஞ்சத கொடுக்கணும்கிற பண்பை சின்ன வயசுலயே கத்துக்கொடுக்கணுகிற நோக்கம்தான்” என்கிறார் அழுத்தமாக.
வாழ்த்துகள் மக்களே..!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…