
கோவை ஈச்சனாரி பகுதியில் பாஜக தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். “ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு நான் காரணம் என்று தினகரன் எப்படி சொல்கிறார் என தெரியவில்லை.
பாஜக எப்போதும் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று தான் நினைக்கும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு இடத்தில் கூட யாரும் வேண்டாம் என்று சொன்னதில்லை. டிடிவி தினகரன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பு ஏற்க முடியாது. செங்கோட்டையன் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அது அவர்களின் உட்கட்சி பிரச்னை என்பதால் அதைப்பற்றி நான் கருத்து சொல்ல முடியாது.
பாஜக மற்ற கட்சி விவகாரங்களில் தலையிடாது. இதை அமித் ஷாவும் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார். டிடிவி மீது மரியாதை வைத்துள்ளோம். எல்லோரும் ஒன்றாக வந்தால் திமுகவை வீழ்த்த முடியும். திமுகவை வீழ்த்த வேண்டாம் என்று நினைத்தால் அது அவர்கள் விருப்பம்.
அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. நிச்சயமாக அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்வோம். ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அப்படித்தான் அண்ணாமலை மற்றும் என்னுடைய செயல்பாட்டில் வித்தியாசம் இருக்கும்.செங்கோட்டையனை பாஜக இயக்கவில்லை. யார் பின்னணியிலும் பாஜக இல்லை.
யாரையும் தவறாக இயக்கவில்லை. என்னை பொறுத்தவரை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். நான் மாநிலத் தலைவராக வருவதற்கு முன்பிருந்தே என் மகன் பாஜக-வில் இருக்கிறார். இது வாரிசு அரசியல் கிடையாது.” என்றார்.