• September 6, 2025
  • NewsEditor
  • 0

“அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், தேவைப்பட்டால் அவருக்கு உதவியாக நாங்கள் இருப்போம்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி செய்தியாளர் சந்திப்பு

அதிமுக தலைவர்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் சூழலில் இன்று மதுரை வந்திருந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் என்.டி.ஏ கூட்டணியிலிருந்தோம். நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு என்பதால் வெளியேறினோம். இதற்கு பாஜக காரணம் அல்ல. நிதானமாக எடுத்த முடிவுதான்.

தேவை இருந்தால்தான் டெல்லியில் உள்ள தலைவர்களைச் சந்திப்பேன், விளம்பரத்திற்குப் பூங்கொத்து கொடுக்க மாட்டேன். அது என் பழக்கம் இல்லை. அமித்ஷா சென்னையில் பேசியபோது ஓபிஎஸ், டிடிவியை இணைப்பீர்களா என்ற கேள்விக்கு உட்கட்சி விவகாரம் எனப் பதிலளித்தார்

யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தேன்? அதற்கு எதிராக அவர்களோடு சேர்ந்துகொண்டு எம்.பி, எம்.எல்.ஏ ஆகும் கூட்டமல்ல நாங்கள். அவர்களோடு சட்டமன்றத்துக்குச் செல்ல விருப்பமில்லை. அண்ணாமலை இருந்தவரை கூட்டணியைச் சரியாகக் கையாண்டார். ஆனால், நயினார் நாகேந்திரன் சரியாகக் கையாளவில்லை.

நான் என்.டி.ஏ-விலிருந்து வெளியேற யாரும் காரணமல்ல. என் தொண்டர்களின் விருப்பம்தான் காரணம். தொண்டர்கள் தான் எனக்கு முக்கியம். நயினார் காரணம் இல்லை, கூட்டணி அமைத்தவர்கள் காரணமில்லை.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைவது நல்லது, அங்குள்ள தொண்டர்கள் அதனை யோசிக்கவில்லை என்றால் ஜெயலலிதா ஆட்சி அமைவது கடினம். செங்கோட்டையன் இப்போது பேசுவதற்கு ஏதாவது காரணம் இருக்கலாம்.

ஆட்சி அமைக்கப் போகிற கூட்டணியில் நாங்கள் இருப்போம். விவாத நிகழ்ச்சிகளில் எங்கள் மீது சிலர் நஞ்சை உமிழ்கிறார்கள். பொறுமையாக இருங்கள் பல வாய்ப்புகள் உருவாகும், நண்பர்கள் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும், எப்போது சேர்வோமோ? அப்போது சேர்வோம். ஸ்லீப்பர் செல்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறுவார்கள்.

அண்ணாமலை, எங்களை கூட்டணிக்குக் கொண்டுவந்தார். அண்ணாமலை நயினார், எனக்கும் நல்ல நண்பர்கள். அண்ணாமலை வெளிப்படையாக இருந்தார். அவர் முயற்சியில்தான் கூட்டணியிலிருந்தோம். அண்ணாமலை நீக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அமித்ஷா ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் முயற்சி தோல்வி அடைந்ததற்குக் காரணம் நாங்கள் அல்ல.

விலக முடிவு எடுத்ததற்குக் காரணம் மாநிலத் தலைவரின் செயல்பாடாக இருக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் மாநிலத் தலைவர் நயினார் பேசியது அப்பட்டமான பொய், அவருக்கு நடந்தது எனக்கும் நடக்கும்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

நான் எத்தனையோ ரெய்டு, கைதுகளைப் பார்த்து வந்தவன். 20 ஆண்டுகள் சிறையிலிருந்தாலும் வெளியில் வந்து அரசியல் பண்ணுவேன். கூட்டணியிலிருந்து வெளியேறியதை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என அண்ணாமலை பேசினார்.

இந்த நேரத்தில் விழித்துக்கொள்ள வேண்டியது அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் தான். அதிமுக விவகாரத்தில் டெல்லி சொல்லச் சரியாகும் என நினைத்தால் அவர்கள் ஏமாந்துபோவோர்கள். நாங்கள் ஒன்றுபட வேண்டும், எங்களை டெல்லியில் வைத்து சமாதானம் பேசலாம் எனக் கனவு காண வேண்டாம். இப்போது என்.டி.ஏ-வில் நாங்கள் இருந்தால் பொருந்தாத கூட்டணியாக இருந்திருக்கும்.

கூட்டணியில் இருப்பது குறித்துப் புரிய வேண்டியவர்களுக்குப் புரியும். எதற்காகவும், யாருக்கும் அடி பணிய மாட்டேன். நாங்கள் சேரும் கூட்டணி உறுதியாக ஆட்சியமைக்கும். ஜெயலலிதா தொண்டர்கள் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும், தற்கொலை செய்துவிட்டா கொள்கையில் இருக்க முடியும்? நாங்கள் இடம்பெறும் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். திமுகவுடனும், சீமானுடன் கூட்டணி இல்லை.

அரசியலில் எதுவும் நடக்கும், புதிய கூட்டணி அமையும், விஜய்யைக் குறைத்துப் பேசக்கூடாது. அரசியலில் புதிதாக இருக்கலாம். அரசியலில் எம்.ஜிஆரை விட சீனியர்கள் அவருடன் இணைந்தார்கள், விஜய்யைக் குறைத்துப் பேச வேண்டாம்.

செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி, எம்.ஜி.ஆர் காலத்து மூத்த நிர்வாகி. அவர் முயற்சி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், தேவைப்பட்டால் அவருக்கு உதவியாக ஜெயலலிதாவின் தொண்டர்கள் நாங்கள் இருப்போம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் கையில் தான் முடிவு உள்ளது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *