
சுற்றுப்பயணத்தின் முதலாவதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி மக்களிடையே பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஆண்டிபட்டி தொகுதி இரண்டு முதலமைச்சர்களை உருவாக்கிய தொகுதி. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் நின்று வெற்றி பெற்ற ஒரே தொகுதி என்றால் அது ஆண்டிபட்டிதான். விவசாயிகள் நிறைந்த தொகுதி.
திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதமாகிறது இந்த தொகுதிக்கு ஏதாவது திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்களா? ஆனால் அதிமுக அப்படியல்ல. 2021ல் விவசாயிகளுக்காக பயிர்க் கடன் ரத்து செய்திருக்கிறோம், சொட்டு நீர்ப் பாசனத்திற்கு 75 சதவீத மானியம் கொடுத்தோம், டிராக்டர் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம், 24 மணி நேரம் மோட்டர் இயக்குவதற்கு மும்முனை மின்சாரம் கொடுத்தோம்.
தேனியின் மக்களின் முக்கிய ஆதாரமாக இருக்கக்கூடிய முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் சென்று சட்ட போராட்டம் நடத்தி 136 அடியிலிருந்து 142 அடி வரை அணையில் நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும் அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடி வரை அளவை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆணை வாங்கினார்.
அதோடு 142 அடி வரை முல்லை பெரியாறு அணையில் நீரைத் தேக்கிக் காட்டியவர் ஜெயலலிதா. நான் முதலமைச்சராக இருந்த போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அணையைப் பலப்படுத்துவதற்குப் பக்கத்தில் உள்ள பேபி அணை மற்றும் தடுப்புச் சுவர்களைப் பலப்படுத்துவதற்கான உபகரணங்களைக் கொண்டு செல்வதற்கு மரங்களை அகற்ற வேண்டும் என்றார்கள். மரங்களை அகற்றுவதற்கான வேலைகளைச் செய்தபோது கேரளா அதை நிறுத்தியது.
இதற்காக கேரளா முதலமைச்சரைச் சந்தித்தேன். அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இன்று வரை முல்லை பெரியாறு அணையை திமுக பலப்படுத்துவதற்கு ஏதாவது செய்திருக்கிறதா? இந்தியக் கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்லும் திமுக அதே கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியிடம் பேசி ஏன் இன்னும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவில்லை.
ஐந்து மாவட்ட விவசாயிகள் முல்லை பெரியாற்றை நம்பி இருக்கிறது. ஆனால் திமுக இதைச் செய்யாது அவர்களுக்கு அக்கறை இல்லை.
வாக்குறுதிகள்

2026 ல் அதிமுக அரசு அமைந்தவுடன் முல்லை பெரியாறு பிரச்னையைக் கையிலெடுப்போம். தேனி கண்மாய்கள் எல்லாம் தூர் வாரப்படும். போதைப் பொருள் தமிழ்நாட்டில் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதை ஒழிக்கிறேன் என்று சொல்லி 2.0 என்று சொல்லி ஒ போட்டுக் கொண்டே ஓய்வு பெற்றுவிட்டார் டிஜிபி ஒருவர். காவல் துறையினரைச் சுதந்திரமாக வேலை செய்ய விடுவதில்லை.
காவல் துறையினருக்கே பாதுகாப்பில்லாத சூழல்தான் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் களையப்பட்டு நல்லாட்சி கொடுப்போம். திமுகவினர் நிறுத்திய தாலிக்கு தங்கம் திட்டத்தையும் ஆட்சிக்கு வந்தால் கொடுப்போம். பொங்கலின் போது தாய்மார்களுக்கு இலவச சேலை கொடுப்போம். பட்டியலினத்தவர்கள் மற்றும் ஏழைகளுக்கு இலவசமாக கான்கீரிட் வீடு கட்டிக் கொடுப்போம்.
இரண்டாயிரம் அம்மா மினி கிளினிக்குகளை திமுக மூடியிருக்கிறது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நான்காயிரம் மினி கிளினிக்குள் திறப்போம். நாங்கள் பள்ளிக்கூடத்தைத் திறந்தோம். ஆனால் திமுக 207 அரசுப் பள்ளிகளை மூடி இருக்கிறார்கள்” என்று பேசினார்.

செங்கோட்டையன் அதிருப்தி பேச்சு
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் சீனியருமான செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களில் ஒன்றிணைக்க வேண்டும் ஒருங்கிணைக்கவில்லையென்றால் நாங்கள் ஒன்றிணைப்போம் என்று எடப்பாடி பழனிசாமிக்குக் கெடு விதித்திருந்தார்.
இந்தப் பிரச்னையிலும் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக விவசாயிகளைச் சந்தித்து அவர்களுடன் உரையாடினர்.

கம்பம் தொகுதி
கம்பம் தொகுதியில் பிரசாரம் செய்தவர், முல்லை பெரியாறு பிரச்னை, பள்ளி மூடல், வாக்குறுதிகளுடன் திமுகவைக் கடுமையாக விமர்சித்தார், “ஸ்டாலின் தனது குடும்பத்தைப் பற்றித்தான் கவலைப்படுகிறார். கருணாநிதி முதல் இன்றைக்கு இன்பநிதி வரை குடும்ப ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தை ஆள இவர்கள் என்ன ராஜ பரம்பரையா? இது ஜனநாயக நாடு. திமுகவில் கடைநிலை தொண்டர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் உயர்நிலைக்கு வர முடியுமா? திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது; என்றார்.
பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் அது நல்ல கட்சி

போடி மற்றும் பெரியகுளத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவைத் தின்று செரித்து விடும்; அது நல்ல கட்சியல்ல என்கிறார்கள். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தீர்களே அப்போது அது நல்ல கட்சியா? திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது நல்ல கட்சி. அதுவே அதிமுக கூட்டணி வைத்தால் அது கேட்ட கட்சியா?
இன்றைக்கு நீதிமன்றத்தின் மூலமாக ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற தீர்ப்பு வந்துள்ளதால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆசிரியர்களின் நிலைமை கவலைக்கிடமாக ஆக்கியுள்ளது.
பத்தாண்டுக் காலத்தில் 15லட்சம் மருத்துவ முகாம் நடத்தி சாதனை படைத்தோம். 460 நடமாடும் மருத்துவக் குழுக்கள் நியமித்து நோயால் அவதிப்படும் மக்களுக்கு நேரிலேயே சென்று குணப்படுத்தினோம்.

அதேபோல் அதிமுக இருந்தபோது இஸ்லாமியர்களுக்காக நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம். அம்மா ஆட்சியிலிருந்த போது அவர்களை இஸ்லாமியர்கள் சந்தித்து ரம்ஜான் அன்று பள்ளி வாசலுக்கு நோம்பு கஞ்சி தயாரிக்க அரிசி கேட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் அதிமுக ஆட்சி அமைக்கின்ற போது 5400 பெட்டி டன் அரிசி கொடுத்தது அதிமுக அரசாங்கம்” என்று பேசினார்.