
கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் வயது (90) மூப்பின் காரணமாக நேற்று (செப்டம்பர் 5) மாலை காலமானார்.
1967 முதல் பாடல்கள் எழுதி வந்த இவர், பக்தி பாடல்கள், ஆயிரக்கணக்கான திரைப்படப் பாடல்கள், 4000க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 2 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதி இருக்கிறார்.
இந்நிலையில் அவரது மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பக்கத்தில்,
“பூவை செங்குட்டுவன்
மறைந்துவிட்டார்
நல்ல வரிகளுக்கு
இழப்பு என்று
பாட்டுலகம் வருந்தும்
எளிமையான சொற்களில்
வலிமையான வாக்கியங்கள்
அவரது அடையாளம்
“திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால்
திருத்தணி மலைமீது
எதிரொலிக்கும்” என்பது
நாத்திகர்களும் விரும்பிக்கேட்ட
நல்ல பாட்டு
கண்ணதாசன் – வாலி
புலமைப்பித்தன் – முத்துலிங்கம்
என்ற போட்டி உலகத்தில்
அவ்வப்போது நல்ல பாடல்களால்
தன் இருப்பை எழுதிக்காட்டியவர்
பூவை செங்குட்டுவன்

மரணம்
உடலை வென்றுவிடுகிறது
ஒரு படைப்பாளன்
மரணத்தை வென்றுவிடுகிறான்
பாடலாசிரியன் மரிக்கலாம்
பாடல்கள் மரிப்பதில்லை
ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டிருக்கிறார்.