
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கொண்டு வர, வட மாநிலத்தைச் சேர்ந்த விராட் (வித்யுத் ஜம்வால்), சிராக் (சபீர் கல்லரக்கல்) தலைமையில் ஒரு கூட்டம் திட்டமிடுகிறது. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பிரேம் (பிஜூ மேனன்), தலைமையில் ஒரு குழு, அதைத் தடுக்க முயற்சிக்கிறது. இதில் காதல் பிரச்சினையால் தற்கொலைக்கு முயலும் ரகு (சிவகார்த்திகேயன்) என்ஐஏ வட்டத்துக்குள் வருகிறார். அவருடைய உயிரை பணயம் வைத்து துப்பாக்கிக் கடத்தல் கும்பலை அழிக்க, என்ஐஏ திட்டமிடுகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் ரகுவின் காதலி மாலதி (ருக்மணி வசந்த்) பணயமாகி விடுகிறார். ரகு, காதலியை மீட்க என்ன செய்கிறார்? துப்பாக்கிக் கடத்தும் கும்பலை அழித்தார்களா, இல்லையா என்பது கதை.
ஏ.ஆர்.முருகதாஸ், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இயக்கியிருக்கும் படம் இது. தனது படங்களில் வேகமான திரைக்கதையால், ரசிகர்களைக் கட்டிப்போடும் முருகதாஸ், இதிலும் அப்படியே செய்திருக்கிறார். துப்பாக்கிக் கலாச்சாரத்தைப் புகுத்தி ரத்தக் களரியாக்க நினைக்கும் கும்பலுக்கும், யார் ரத்தம் சிந்தினாலும் ஓடிச் சென்று உதவும் தன்மையுள்ள நாயகனுக்குமான இரண்டே முக்கால் மணி நேர கதையை விறுவிறுப்புக் குறையாமல் இயக்கியிருக்கிறார்.