
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் எதாவது ஒரு சர்ச்சையில் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். ஏற்கனவே ராஜ் குந்த்ரா ஆபாசப் படம் தயாரித்தது மற்றும் கிரிப்டோகரன்சி பிரச்னையில் சிக்கினார்.
இப்போது தம்பதியினர் ரூ.60 கோடி மோசடியில் சிக்கியிருக்கின்றனர். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவரிடம் ரூ.60 கோடியை 2015-23ம் ஆண்டுகளில் ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் கடனாக வாங்கி இருக்கின்றனர்.
ஆனால் பின்னர் அந்தக் கடனை கம்பெனி முதலீடு என்று கூறிவிட்டனர். அதோடு ரூ.60 கோடிக்கு 12 சதவீத வட்டி கொடுப்பதாகத் தெரிவித்தனர்.
அதனை கோதாரி நம்பினார். ஷில்பா ஷெட்டியே 2016ம் ஆண்டு அக்கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தார். ஆனால் சொன்னபடி பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் சேர்ந்து பெஸ்ட் டீல் டிவி என்ற டெலிமார்க்கெட்டிங் கம்பெனியை ஆரம்பித்தனர்.
இதன் தொடக்கவிழாவில் நடிகர் அக்ஷய் குமாரும் கலந்து கொண்டார். ஆனால் அந்தக் கம்பெனி சில மாதங்களில் மூடப்பட்டுள்ளது. தற்போது அக்கம்பெனி மத்திய தீர்ப்பாயத்தில் இருக்கிறது.
ரூ.1.28 கோடி கடனைத் திரும்பச் செலுத்தாததால் கம்பெனி மத்திய தீர்ப்பாயத்தில் இருப்பது கோதாரிக்குத் தெரியாமல் இருந்தது. அவரிடம் ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் சொல்லவில்லை. இது குறித்துத் தெரிய வந்த பிறகு இருவர் மீதும் கோதாரி போலீஸில் புகார் செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்வதைத் தடுக்கும் நோக்கில் இருவருக்கும் எதிராகத் தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில்தான் ஷில்பா ஷெட்டி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது ரெஸ்டாரண்டை மூடினார். ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.