
“காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எப்படி கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு இந்த காவல் நிலையம் ஒரு உதாரணம்” என்று மதுரையிலுள்ள திலகர் திடல் காவல் நிலையத்தை குற்றம்சாட்டி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விஜயகுமார் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரையைச் சேர்ந்த சசிகுமார், ரம்யா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த முன் ஜாமீன் மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, “மனுதாரர்கள் மருந்து பொருட்களை வாங்கியதற்காக 15 லட்சம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த தொகையை செலுத்தாததால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை திலகர் திடல் காவல் நிலையம் இந்த வழக்கில் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாக மாறியுள்ளது. சுமார் 8 லட்சத்து 83 ஆயிரத்து 400 ரூபாயை மனுதாரர்கள் காவல் நிலையத்தில் செலுத்தி ரசீது பெற்றுள்ளனர். இது அரசு வழக்கறிஞராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எவ்வாறு கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்.
கைது நடவடிக்கைக்கு பயந்து காவல் நிலையத்தில் மனுதாரர்கள் பணத்தை செலுத்தியுள்ளனர். திலகர் திடல் காவல் நிலையம் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாக செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது.

ஆகவே இந்த வழக்கில் மதுரை மாநகர துணை காவல் ஆணையரை நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கில் சேர்க்கிறது. அவர் இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ளதா? திலகர் திடல் காவல் ஆய்வாளர் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து நடத்தி வருகிறாரா? என்பதை உறுதி செய்து சம்பந்தப்பட்ட திலகர் திடல் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு, மனுதாரர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.