
டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில் ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை பிசிசிஐ உயர்த்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய்க்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக ஒப்பந்தம் மேற்கொண்டது.
மொத்தம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இணையவழி பண விளையாட்டு நிறுவனமான டிரீம் 11-ம் பிசிசிஐ நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து டிரீம் 11 நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் பிற்காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது என்றும் ANI செய்தி நிறுவனத்திடம் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை பிசிசிஐ உயர்த்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இருதரப்பு போட்டிக்கான கட்டணம் தலா ரூ.3.17 கோடியிலிருந்து ரூ.3.50 கோடியாக அதிகரித்திருப்பதாகவும், ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகளுக்கான கட்டணம் தலா ரூ.1.12 கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக அதிகரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஸ்பான்சர்ஷிப் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.400 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.