• September 5, 2025
  • NewsEditor
  • 0

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. பல தலைவர்கள் அமைதிக்காக குரல் கொடுத்துள்ளனர்.

பல கட்ட பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், ரஷ்யா அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு வரக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.

புதின், ட்ரம்ப் பேச்சுவார்த்தை

தொடர்ந்து புதினை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துவருகிறார் ஜெலன்ஸ்கி. அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப்பை சந்தித்த புதின், ஜெலன்ஸ்கி சந்திப்பை புறக்கணித்து வருகிறார்.

கடந்த புதன் கிழமை சீனாவில் பயணத்தை முடித்துக்கொண்ட புதின் இறுதியாக அங்கு பேசும்போது, “பொது அறிவு மேலோங்கினால், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. அதுதான் எனது அனுமானம்… அமெரிக்கா வெறும் வார்த்தைக்காக இல்லாமல் நிஜமாகவே ஒரு முடிவை எட்ட தீவிரமாக செயல்படுகிறது.

சுரங்கத்தின் முடிவில் ஒரு ஒளி இருக்கும் என நினைக்கிறேன். இது எப்படி செல்கிறது எனக் காணலாம். ஒருவேளை தீர்வு எட்டப்படாவிட்டால் நம் முன்னாள் இருக்கும் அனைத்து வேலைகளையும் ஆயுத பலத்தால் முடிக்க வேண்டியிருக்கும்.” எனப் பேசினார்.

ஜெலன்ஸ்கி

மேலும், ஜெலன்ஸ்கி உடனான உரையாடலை தான் புறக்கணிக்கவில்லை என்றும், அதனால் என்ன பயன் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாஸ்கோவில் ஜெலன்ஸ்கியைச் சந்திக்கத் தயார் என்றும், அவருக்கு 100% பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால் புதினின் இந்த அழைப்பை ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டார்.

ஐரோப்பாவின் coalition of the willing கூட்டணியின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, பாரிசில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெலன்ஸ்கி, “மாஸ்கோவுக்கு அழைப்பது என்பது சந்திப்பை தவிர்ப்பதற்கான வழிமுறையே” எனக் கூறியுள்ளார். அதாவது சாத்தியமே இல்லாத இடத்துக்கு அழைப்பதன் மூலம் பேச்சுவார்த்தையில் இருந்து புதின் தப்பிக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தில் புதின் மற்றும் ஜெலன்ஸ்கி நேரில் சந்தித்து உரையாடுவர் எனக் கூறுகிறது ரஷ்யா தரப்பு.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *