
மலையாள சினிமாவின் சூப்பர் ஹீரோ படமான லோகா சாப்டர் 1: சந்திரா திரையரங்குகளில் சாதனை படைத்துவருகிறது. பெண் மைய கதையான லோகாவில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார். நாடுமுழுவதுமிருந்து இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்திய – ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, லோகா படத்தைப் பார்க்கப்போவதாக தனது சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளார். “இதோ இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ. ஒட்டுமொத்த லோகா குழுவுக்கும் துல்கர் சல்மானுக்கும் வாழ்த்துகள். இந்தக்கதை ஏற்கெனவே மலையாளத்தில் இதயங்களை வென்றுள்ளது. இப்போது இந்தியிலும் வெளியாகிறது. நான் என்னுடைய வாட்ச் லிஸ்டில் சேர்த்துவிட்டேன்.” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக படம் குறித்து தனது ரிவ்யூவைப் பகிர்ந்த ஆலியாபட், “மிகவும் புதியவகையில் புராண நாட்டுப்புறக் கதைகள் & மர்மங்களும் பிணைந்துள்ளன. இந்த படம் பெறும் ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது. சினிமாவின் இதுபோன்ற அடுத்த படிகளுக்கு என்னுடைய அன்பையும் ஆதரவையும் வழங்க எப்போதும் காத்திருக்கிறேன் ” எனக் கூறியுள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷனை பாராட்டிய பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், “திறமை குடும்ப ரத்தத்தில் ஓடுவதாக கேள்வி பட்டிருக்கிறேன்… இப்போதுதான் பார்க்கிறேன். பிரியதர்ஷன் சாரின் மகள் கல்யாணியின் அற்புதமான நடிப்பு குறித்து அழகான விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். அவருக்கும் ஒட்டுமொத்த லோகா திரைப்படக்குழுவுக்கும் அதன் இந்தி வெர்ஷன் வெற்றியடைய வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
Lokah Chapter 1: Chandra
அருண் டொமினிக் இயக்கியுள்ள லோகா படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருக்கிறார். கல்யாணி பிரியதர்ஷனுடன் நஸ்லென், சாண்டி, அருண் குரியன், சந்து சலீம்குமார், நிஷாந்த் சாகர், ரகுநாத் பலேரி, விஜயராகவன், நித்ய ஸ்ரீ மற்றும் சரத் சபா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
சுமார் 30 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், அதன் முதல் வாரத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. தென்னிந்திய ஹீரோயின் முதன்மை படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.