
வாரிசு அரசியல் விவகாரத்தில் தி.மு.க-வை பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இவ்வாறிருக்க, பா.ஜ.க-வில் மாநில அளவிலான பிரிவுகளுக்கு அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவுக்கு நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். கூடுதலாக, ஆர்த்திக் என்பவரும் அதே பதவியில் நியமிக்கப்பட்டியர்ந்தார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம், “நயினார் நாகேந்திரன் மகனுக்கு பா.ஜ.க-வில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது வாரிசு அரசியலில் வராதா?” என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
அதற்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலளிக்கையில், “23 பிரிவுகளில் அவருக்கு ஒரு பிரிவு வழங்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் ஒன்றும் உதயநிதி மாதிரி எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவருக்கு அடுத்தவர் என்று வைக்கவில்லையே.
அவர் ஏற்கனவே அரசியல் அனுபவம் பெற்றிருப்பதால் 23 பிரிவுகளில் ஒரு பிரிவு வழங்கப்பட்டிருக்கிறது.
இன்று தி.மு.க என்ன செய்கிறது. அடுத்த நிலையைக் கொடுத்து விடுகிறது. ஸ்டாலினை நாங்கள் எதுவும் சொல்வதில்லை. ஏனெனில் அவர் உழைத்து வந்தார்.
18 கோடி பேரில்தான் ஒருவர் தலைவராக வர முடியும் என்று அமித் ஷா கூறியிருக்கிறார்.

உங்களால் (திமுக) கூற முடியுமா? இன்று இன்பநிதி சிஇஓ ஆகிவிட்டார். அடுத்து CM ஆவார்.
அப்படி ஆக முடியாது. நாங்கள் விடமாட்டோம். ஆனால், அடுத்த அடியை அப்படித்தானே எடுத்து வைக்கிறார்கள்” என்று கூறினார்.
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லிக் கடை திரைப்படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றிருக்கும் நிலையில், அதுகுறித்த அறிவிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இன்பன் உதயநிதி படத்தை வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.