
தன்னிடம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க ஆதாரத்துடன் புகார் அளித்தும், கண்டுகொள்ளாத லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை கேட்டுப் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்துள்ள வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கிழ பனங்காடியைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கோழித்தீவனம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கி விற்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.
பரவையில் உள்ள சேமிப்புக் கிடங்கிலிருந்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி நாமக்கல்லில் உள்ள சுரேஷ் என்பவரின் கோழிப்பண்ணைக்கு கோழித்தீவனம் தயாரிக்கும் 13, 400 கிலோ குருணையை உரிய ஆவணங்களுடன் வாடகை வாகனத்தில் அனுப்பி வைத்தேன்.
கொடைரோடு டோல்கேட் அருகே குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையிலான போலீசார்கள் வாகனத்தைச் சோதனை செய்துள்ளனர். டிரைவர் அனைத்து ஆவணங்களையும் காண்பித்தும் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு, நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையளர் சுரேஷுக்கு போன் செய்த இன்ஸ்பெக்டர் சுகுணா நேரில் வரச்சொல்லியுள்ளார்.
அவர் உடனே எனக்குத் தகவல் சொன்னதால் நான் உடனே இன்ஸ்பெக்டர் சுகுணாவைத் தொடர்புகொண்டு வாகனத்தில் உள்ளது கோழித்தீவனம் தயாரிக்கப் பயன்படும் குருணைதான் என்று விளக்கமாகக் கூறியபோது போனைத் துண்டித்துவிட்டார். பின்பு என்னைத் தொடர்பு கொண்டவர், ‘மேலிட அழுத்தம் காரணமாக வழக்குப்பதிவு செய்தே ஆக வேண்டும், இந்த குருணையைக் கொள்முதல் செய்தவர், வாங்குகிறவர், டிரைவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கொள்கிறேன், உங்களை மட்டும் வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு ரூ 5 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும்’ என்றார்.

நான் உடனே திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்குப் பேசினேன், அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கீதா ரூபினியிடம் பேசச் சொன்னார்கள். உடனே அலுவலகத்துக்குச் சென்று நடந்த விவரத்தைக் கூறினேன். பின்பு அவர்கள் சொன்னதுபோல் குடிமைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுணாவை நேரில் சந்தித்துப் பேசியபோது, அவர் பேசியதை ரிகார்ட் செய்து கொண்டு வந்து கொடுத்தேன். இதை ஒரு லஞ்ச ஒழிப்புத்துறை காவலரும் தெரியாமல் கண்காணித்தார்.
பிறகு இன்ஸ்பெக்டர் சுகுணாவிடம் முதலில் ஒரு லட்சம் தருகிறேன், இரண்டு நாட்கள் கழித்து இரண்டு லட்சம் தருகிறேன் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியதுபோல் பேசியதையும் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கீதா ரூபினியிடம் கொடுத்தபோது, ‘சீரியல் எண்களைக் குறிக்க வேண்டும், அதனால் இன்ஸ்பெக்டருக்குப் பணம் கொடுக்க செல்லும் முன் எங்களிடம் பணத்தைக் கொடுத்து வாங்கி செல்லுங்கள்’ என்று சொன்னதால் அதன்படியே கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஒரு லட்சத்தைக் கொடுத்தேன்.
ஆனால், அதற்குப் பின் எந்த நடவடிக்கையும் இல்லை, பின்பு போய் கேட்டதற்கு என்னிடம் ஒரு லட்சத்தைத் தந்துவிட்டு, ‘உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டார்கள். அதனால் கவலைப்படாமல் செல்லுங்கள்’ என்று கூற, நானும் நம்பிக்கையுடன் வந்துவிட்டேன். ஆனால், கேட்ட லஞ்சப் பணத்தைக் கொடுக்காததால் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு இன்ஸ்பெக்டர் சுகுணா, டிரைவரை மிரட்டி வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து, ரேசன் அரிசி கடத்தியதாக என்னையும் குற்றவாளியாகச் சேர்த்துவிட்டார்.
இன்ஸ்பெக்டர் சுகுணா லஞ்சம் கேட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைத்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்தப் பொய் வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தப் புகாரைத் திரும்பப் பெற வேண்டுமென்று சில போலீசார் என் வீட்டுக்கு வந்து மிரட்டுகின்றனர். எனவே இந்த வழக்கிலிருந்து என்னை விடுவித்தும், லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்துள்ள என் புகாரை சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, இந்த மனுவிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.