• September 5, 2025
  • NewsEditor
  • 0

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகில் உள்ள குர்து என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதை தடுப்பதற்காக மண்டல போலீஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா சம்பவ இடத்திற்கு சென்றார். அவர் அங்கு சென்றபோது மண் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கொண்டிருந்தது. அவர்களை அஞ்சனா கிருஷ்ணா தன்னுடன் சென்ற போலீஸார் மூலம் தடுத்து நிறுத்தினார். இதனால் கிராமத்தினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு உள்ளூர் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் வந்தனர்.

பாபா ஜக்தாப் என்ற கட்சி நிர்வாகி நேரடியாக துணை முதல்வர் அஜித் பவாருக்கு போன் செய்து நிலவரத்தை சொல்லி பெண் போலீஸ் அதிகாரி அஞ்சனாவிடம் கொடுத்து பேச சொன்னார்.

அஜித் பவாரும் அஞ்சனாவிடம் பேசினார். அதற்கு அஞ்சனா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. ஆனால் நான் துணை முதல்வரிடம்தான் பேசுகிறேனா என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே எனது போனில் நேரடியாக எனக்கு கால் பண்ண முடியுமா என்று அஞ்சனா கேட்டார். இதனால் அதிர்ச்சியான அஜித்ப வார் மிரட்டும் தொனியில் அஞ்சனாவிடம் பேசினார். ”உன்னை என்ன செய்கிறேன் பார். நானே போனில் பேசுகிறேன். அப்படி இருக்கும் போது என்னிடம் உனக்கு நேரடியாக போன் பண்ண சொல்கிறீர்கள்.

உங்களுக்கு என்னை பார்க்க வேண்டுமா? எனது வாட்ஸ் ஆப் நம்பரை வாங்கி வாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் பண்ணுங்கள். உங்களுக்கு அவ்வளவு துணிச்சலா?” என்று கேட்டார். அப்படி இருந்தும் அஞ்சனாவிற்கு அஜித் பவாரின் சத்தம் பிடிபடவில்லை. இதையடுத்து அஜித் பவார் வீடியோ காலில் வந்து நடவடிக்கையை உடனே நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு, பெண் அதிகாரி இதற்கு முன்பு அஜித் பவாரிடம் பேசுகிறேன் என்று என்னால் அடையாளம் காணமுடியவில்லை என்றார். அதற்கு இப்போது என்னை அடையாளம் காண முடிகிறதா என்று அஜித் பவார் கேட்டார்.

அவர்கள் பேசிக்கொண்டது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி இருக்கிறது. சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்க சென்ற பெண் அதிகாரியை அஜித் பவார் மிரட்டியதை தேசியவாத காங்கிரஸ் நியாயப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்கரே அளித்த பேட்டியில்,”அஜித் பவாரின் பேச்சு தவறாக புரிந்துகொள்ளபட்டுவிட்டது. அவர் சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்கவில்லை. கட்சி நிர்வாகிகளை அமைதிப்படுத்தவே போன் செய்தார்” என்றார்.

அஜித் பவார் பெண் அதிகாரியை மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் பராஞ்பே இது தொடர்பாக அளித்த பேட்டியில்,” ஜனநாயகத்தில் ஒவ்வொரு தொண்டரின் குறைகளும் கேட்கப்படவேண்டும். அஜித் பவார் நிலைமையை கட்டுப்படுத்தவே முயற்சி செய்தார்” என்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கிறது. இக்கூட்டணியில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கிறது. அஜித் பவார் துணை முதல்வராக இருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *