• September 5, 2025
  • NewsEditor
  • 0

கடலூர் குமாரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் – ஞானசவுந்தரி தம்பதிக்கு, கடந்த 2023-ம் ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு குணஸ்ரீ, குகஸ்ரீ என பெயர் வைத்து மகிழ்ந்தனர் சிவசங்கரும், ஞானசவுந்தரியும்.

சிவசங்கர் நேற்று காலை வழக்கம்போல வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தபோது, வீட்டின் பின் பகுதியில் குணஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் திடீரென தவறி விழுந்து மூழ்கினார் குழந்தை குணஸ்ரீ.

அதை யாரும் கவனிக்காததால் மூச்சுத் திணறிய குணஸ்ரீ உடனே மயங்கிப் போனார். வேலைக்கு செல்வதற்கு முன்பு குழந்தைகளை கொஞ்சிவிட்டு செல்லும் சிவசங்கர், குணஸ்ரீயை தேடியிருக்கிறார். அப்போதுதான் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

குழந்தை உயிரிழப்பு

அதையடுத்து வீடு மற்றும் அக்கம்பக்கத்தில் தேடிய அவர்கள், இறுதியாக குணஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் தேடினர். அப்போது சந்தேகமடைந்து அங்கிருந்த வாளிக்குள் பார்த்தபோது, அதில் குழந்தை தலைகுப்புற மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதைப் பார்த்து அலறித் துடித்த அவர்கள், குழந்தையை கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு குழந்தை குணஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவரும் நிலையில், ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *