
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்திருந்தார்.
அதேபோல், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செங்கோட்டையன், “கட்சியில் இருந்து வெளியேறிவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால்தான் அதிமுக வெற்றி பெற முடியும்.
‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற அடிப்படையில் கட்சியைவிட்டு வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பு என்பது இந்த நேரத்தில் முக்கியம். அதுதான் அதிமுக தொண்டர்களின் விருப்பம். விரைந்து இதைச் செய்ய வேண்டும்.
10 நாள்களில் பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்து அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும். அதிமுக ஒருங்கிணைந்தால்தான் நான் முழுமையாக இறங்கி வெற்றிக்காகப் பணியாற்றுவேன்.
இது நடந்தால்தான் சுற்றுப்பயணம், தேர்தல் பணிகளில் இறங்கி பணியாற்றுவேன்,” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது செங்கோட்டையன் பேசியது குறித்து திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், ” செங்கோட்டையன் அவரது முடிவை சொல்லி இருக்கிறார். ஆனால் பொதுச்செயலாளர் எடப்பாடி எடுப்பதே எங்கள் முடிவு” என்று தெரிவித்திருக்கிறார்.