
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோர் விலகல், இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளை அழைத்து அமித் ஷா திடீர் ஆலோசனை நடத்தியதன் பின்னணி, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி விவகாரம் பரபரப்பாக உள்ளது.
இது போதாதென்று, தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டங்களைத் தவிர்ப்பது, டெல்லிக்கு தனியாகச் சென்று நிர்மலா சீதாராமனைச் சந்திப்பது என வெளிப்படையாகச் செயல்பட்டு வந்த அ.தி.மு.க. மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் 5-ம் தேதி மனம் திறந்து பேசப்போவதாக சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தனது அலுவலகத்தின் முன்பு செய்தியாளர்களை இன்று சந்தித்த செங்கோட்டையன்,
“கட்சியைவிட்டு வெளியே சென்றவர்களை மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அடுத்த 10 நாள்களுக்குள் மீண்டும் சேர்த்து அ.தி.மு.க-வை ஒன்றிணைக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் கூட குறிப்பிடாமல் கெடு விதித்தார்.
மேலும், “அ.தி.மு.க ஒருங்கிணைந்தால்தான் நான் முழுமையாக சுற்றுப்பயணம், தேர்தல் பணிகளில் இறங்கி பணியாற்றுவேன்.” என்று செங்கோட்டையன் எச்சரிக்கையும் விடுத்தார்.
இந்த நிலையில், செங்கோட்டையனின் இத்தகைய கருத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சசிகலா, “அ.தி.மு.க எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம் என்பதைக் கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்திருக்கிறார்.
பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடன் இருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அ.தி.மு.க-வின் ரத்தம்தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார்.
கழகம் ஒன்றுபட செங்கோட்டையனின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்தும் இதுதான், நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.

செங்கோட்டையனைப் போன்ற உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை தி.மு.க என்ற தீய சக்தி எந்த விதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடாக ஈடேறாது.
தி.மு.க-வின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது.
இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எனவே தி.மு.க என்ற தீய சக்தி, நம் கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் தடை போட்டு தடுத்தாலும், அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும் செருக்கோடும் மிளிரும்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட வலிமைமிக்க அ.தி.மு.கதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழி வகை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.