
புதுச்சேரி: “ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா இணைந்தால் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு பிரச்சினை வரும். அதனால் அதை அவர் ஏற்க மாட்டார். அதிமுக உடைந்த கண்ணாடி ஒட்டவைப்பது கடினம்.” என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டித்து அரசுப் பள்ளிகளில் சமச்சீர் கல்வியை அனுமதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெல்லித்தோப்பு சுப்பையா சிலையிலிருந்து பேரணி இன்று தொடங்கியது. இப்பேரணி கல்வித்துறை அலுவலகத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநிலச் செயலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா, ராஜாங்கம், பெருமாள், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.