
சென்னை: பூந்தமல்லி – பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம் வரை நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.2,125.84 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 116.1 கி.மீ தொலைவில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 3 வழித்தடங்களில், இரு வழித்தடங்களை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.