• September 5, 2025
  • NewsEditor
  • 0

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு

‛இதற்குத்தானடா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்று ஒரு மிடில் க்ளாஸ் மாதவன் வாய்ஸில் இருந்து கத்த வேண்டும்போல் இருக்கிறது இந்த ஜிஎஸ்டி வரிக் குறைப்புச் செய்தி. 

சும்மாவா பின்னே! 10% வரி குறைந்திருக்கிறது என்றால், கார்/பைக் வாங்கும் மிடில் க்ளாஸ் வாடிக்கையாளர்களுக்கு நல்ல லாபம்தான்.

28%-த்தில் இருந்து 18% ஆகக் குறைந்திருக்கிறது கார்/பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி. அதாவது, 350 சிசிக்குக் குறைந்த டூவீலர்களுக்கும், 1,200 சிசி மற்றும் 4 மீட்டருக்குட்பட்ட பெட்ரோல் வாகனங்களும், 4 மீட்டருக்குட்பட்ட 1,500 சிசி டீசல் வாகனங்களுக்கும் மட்டும் இந்த வரிக்குறைப்பு நடந்திருக்கிறது. 

Bike Showroom

1.5 லிட்டருக்கு மேற்பட்ட, சொகுசு வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 40% ஆக அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

இப்போது மிடில் க்ளாஸ் மேட்டருக்கு வரலாம். எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்துதான் இந்த ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பொருந்தும் என்பதால், வாடிக்கையாளர்களுக்குக் கணிசமான விலைக்குறைப்பு கிடைக்கும். இதுவரை 10 லட்ச ரூபாய்க்கு ஒரு காரை வாங்கீனிர்கள் என்றால், 2.8 லட்ச ரூபாய் அரசுக்கு நீங்கள் வரியாகச் செலுத்தி வந்தீர்கள். இனிமேல் 1.8 லட்ச ரூபாய் வரியாகச் செலுத்தினால் போதும். 

ஸ்ப்ளெண்டர் பைக் விலை

எடுத்துக்காட்டுக்கு, ஒரு ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கை எடுத்துக் கொள்ளலாம். இதன் ஆன்ரோடு விலை 1 லட்ச ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இந்த 10% வரிக்குறைப்பு மூலம் சுமார் 12,000 – 15,000 ரூபாய் வரை விலை குறையும். 

கார் விலை

இதுவே ஒரு சின்னக் காரை எடுத்துக் கொள்ளலாம். இதில் மாருதிதான் கிங். ஆல்ட்டோவை எடுத்துக் கொண்டால், இதன் ஸ்டாண்டர்டு மாடல் ஆன்ரோடு விலை 5 லட்சம் என்றால், இதில் நிச்சயம் 45,000 முதல் 50,000 வரை விலை குறையும் என்பது மகிழ்ச்சிச் செய்திதானே!

Car Showroom

50,000 ரூபாய் என்பது சாதாரண தொகை இல்லை; மாதம் 2,000 ரூபாய் பெட்ரோலுக்குச் செலவழிப்பீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; 2 ஆண்டுகளுக்கான பெட்ரோல் செலவை இதன் மூலம் மிச்சப்படுத்தலாம் என்பது நல்ல விஷயம். இதுவே 10 லட்ச ரூபாய் கார் என்றால், 1 லட்ச ரூபாய் வரை விலை குறையும்.

டயர் விலை

இன்னொரு நல்ல விஷயமும் நடந்திருக்கிறது. டயர்களுக்கான வரியும் குறைந்திருக்கிறது. ஆம், டயர்களுக்கான மூலப்பொருள்களுக்கான வரிவிகிதம் 12%-த்தில் இருந்து 5% வரை குறைந்திருப்பதால், டயர்களின் விலையும் 2% வரை விலை குறைய வாய்ப்புள்ளது. உதாரணத்துக்கு, ஒரு காரின் டயர் 250 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை விலைக் குறைப்பு நடக்கும்.

டிராக்டர்

கூடவே டிராக்டர்களுக்கும் வரி்க் குறைப்பு நடந்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். 12% ஆக இருந்த வரி வெறும் 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது எல்லா டிராக்டர்களுக்கும் கிடையாது என்றாலும், 1,800 சிசிக்கு உள்பட்ட டிராக்டர்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கும் இதன் மூலம் பலன் கிட்டும். 

Tractor

இந்த வரிக்குறைப்பும், விலைக் குறைப்பும் செப்-22 முதல் அமுலுக்கு வருகிறது. இதன் மூலம் செப்டம்பர் முதல் வாகன விற்பனை நிச்சயம் அதிகரிக்கும். ஏற்கெனவே கம்பெனிகளிடம் 50 முதல் 60 நாள் ஸ்டாக் உள்ளதால், சரசரவென விற்பனை கொடிகட்டிப் பறக்கும். அட, கார்களுக்கான வெயிட்டீங் பீரியட்டும் குறையும். 

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்; ‛ஜிஎஸ்டி வரிதான் குறைஞ்சிடுச்சே; நாங்க உற்பத்திச் செலவை ஏத்தப் போறோம்’  என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் அறிவிக்காமல் இருக்க வேண்டும். 

Bike Showroom

உதாரணத்துக்கு, ஒரு பைக்கின் ஆன்ரோடு விலை 1.10 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இதன் எக்ஸ் ஷோரூம் விலை 80,000 ரூபாய் இருக்கும். அதாவது – இந்த விலைக்கு ஒரு டீலருக்கு வாகன உற்பத்தி நிறுவனம் தன் வாகனத்தை விற்கும். இந்த எக்ஸ் ஷோரூம் விலை என்பது உற்பத்தி விலை கிடையாது. அந்த 80,000 ரூபாயில் உற்பத்தி விலை என்பது எம்புட்டு என்பது கார்/பைக் கம்பெனிகளுக்கே வெளிச்சம். தயவுசெஞ்சு ஏத்திப்புடாதீங்க மக்கா! 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *